ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம்… மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை..!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வந்துள்ளதா, அதில் பங்கேற்பீர்களா என உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அயோத்தி செல்வதற்கு அழைப்பு தேவையில்லை.

குழந்தை ராமர் அனைவருக்குமானவர். அவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. ராம பக்தி என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. எப்போதெல்லாம் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் செல்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோதும் நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்காக சிவ சேனா மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.

ராமர் கோயில் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஒரு இடைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையே எனது தந்தை பால் தாக்கரே இழந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம். மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நாமக்கல்லில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பெங்களூரு செல்லும் 42 ஆலய மணிகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 2024ல் நடைபெறும் நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் பக்தர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற யூனிட்டில் 48 மணிகள் தயாரிக்க கடந்த மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மொத்தம், 1,200 கிலோ எடையுள்ள, 42 மணிகள் கட்டி முடிக்கப்பட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின், பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 6 மணிகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.