நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது, “அண்ணாமலையும், டிடிவி தினகரனும் ஏன் ஒன்றிணைந்துள்ளோம் என்றால், தமிழகத்தின் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளம் தான் தற்போது நடக்கும் மக்களவை தேர்தல். 400 இடங்களை பெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதில் முதன்மை உறுப்பினராக தேனியின் குரலாக தானும் இருக்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தை முதலில் ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை கோபாலபுரம் குடும்பத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். 33 மாதங்களாக அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி அமைந்துள்ளது.
தேனியில் டிடிவி.தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் என அனைத்து இடங்களிலும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கட்சியில் இருந்து வேறு யாரவது ஒருவரை நிறுத்தியிருக்கலாம். ஏன், அவரே களத்தில் இறங்கியுள்ளார் என்றால், மோடி மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும், தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான் என அண்ணாமலை குப்புசாமி தெரிவித்தார்.