ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டண படுக்கையை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு ..!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று ஈரோடு அரசு மருத்துவமனையில் ஏசி வசதி, தொலைக்காட்சியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது, பேசுகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏசி மற்றும் தொலைக்காட்சி வசதியுடன் கூடிய கட்டண படுக்கை அறை வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கடந்த பட்ஜெட்டின் போது தமிழகத்தில் 16 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை, மதுரை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் இந்த கட்டண படுக்கை அறை திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது ஈரோட்டில் 20 கட்டண படுக்கை அறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டண அறையில், குளிர்சாதன வசதி, தனி கழிப்பறை, தனி குளியல் அறை, தொலைக்காட்சி பெட்டி ஆகிய வசதிகள் உள்ளன. இதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி அதிகாரிகள் அறிவிப்பார்கள்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,900 மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்தது என்றால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் இலவச சிகிச்சை என்றாலும் சில மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைபாடுடன் இருப்பதால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் போது சில சிரமங்களை அனுபவிக்கிறார்கள். இதனாலேயே பலரும் தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் நிலையும் உள்ளது.

தற்போது அரசு மருத்துவமனைகளிலேயே கட்டணத்துடன் கூடிய படுக்கை அறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது நோயாளிகளின் சிரமத்தை பெரிதும் போக்கும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வசதியை அமல்படுத்துவது மட்டுமின்றி தொடர்ந்து சிறப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து, ரூ.32.5 லட்சம் செலவில் 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குனர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் அதிரடி பணியிடை நீக்கம்

தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ பரவியது. இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட இணை மருத்துவ இணை இயக்குநர் நேரில் சென்று, உணவக உரிமையரிடம் விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மையென தெரியவந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.