திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், சுமார் 15 மணிநேரம் நடத்திய விசாரணையின் முடிவில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை நேற்றிரவு அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.