துட்டுவாங்கி தானே ஓட்டு போட்ட…! அதிமுக கவுன்சிலர் அடாவடி..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 7-வது வார்டின் கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த சுரேஷ் பதவி வகித்து வருகிறார். இந்த வார்டுக்குட்பட்ட பகுதி பிலால் நகர் உள்ளது. அப்பகுதியில் சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர அப்பகுதியினர் நேற்று அங்கு வந்த கவுன்சிலர் சுரேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அதிமுக கவுன்சிலர் சுரேஷ், அப்பகுதியினருக்கு உரிய பதில் தராமல் பொதுமக்களிடம் துட்டுவாங்கினு தானே ஓட்டு போட்ட என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது ஆம்பூர் மற்றும் சுற்றுபகுதியில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுப்பாதையை பயன்படுத்திய பட்டியலின தாய், மகன் மீது அதிமுக கவுன்சிலர் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி கொளத்துப்பாளையம் பட்டியலினத்தை சேர்ந்த முத்துசாமி. இவர் வீட்டின் முன் உள்ள பொதுப்பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முத்துச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்த கூடாது என மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கயம் ஒன்றிய அதிமுக அவை தலைவரும், யூனியன் கவுன்சிலருமான பழனிசாமி தலைமையில் கட்ட பஞ்சாயத்து நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் ஆதிக்க ஜாதியினர், முத்துச்சாமியை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். முத்துசாமி தாக்கப்படுவதை கண்ட அவரது தாய் அருக்காணி தடுக்க முயன்ற போது அக்கும்பல் தாயையும் தாக்கியது. இதில் காயமடைந்த முத்துசாமி காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி காங்கயம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அதிமுக கவுன்சிலர் பழனிசாமி, நாகரத்தினம், தனசேகரன் ஆகிய 3 பேர் மீது எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளில் காங்கயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதிமுக கவுன்சிலரின் மாமூல் ‘தினமும் 100 ரூபாய் வெட்டு…’

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன் மாலை, இரவு நேரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் வைத்து சிலர் பாஸ்ட் புட் பிரியாணி கடை நடத்துகின்றனர். அந்த கடைக்கு 5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் சென்று, ‘போக்குவரத்துக்கு இடையூறா இங்கே பிரியாணி கடை நடத்துறீங்க… எனக்கு தினமும் நூறு ரூபாய் தரணும்’ என்று கேட்கிறார். அதற்கு கடை நடத்துபவர், ‘அதான் அவ்வப்போது வந்து வாங்கிட்டு போறீங்களே போதாதா? தினமும் 100 ரூபால்லாம் தர முடியாது.

நாங்க கடைக்கே 2,500 ரூபா வாடகை கொடுக்க வேண்டியிருக்கு, உங்களுக்கு 3 ஆயிரம் கொடுக்கனும்னா எப்படி முடியும்?’ என்று பதில் அளிக்கிறார். இதற்கு, ‘எனக்கு பணம் தராட்டா இங்க கடை போட விடமாட்டேன்’ என மிரட்டுகிறார் கவுன்சிலர். அதற்கு கடை நடத்தும் இளைஞர், ‘நானும் இந்த ஊர்க்காரன்தான், வக்கீல்தான், நாங்க கடைபோடுவோம். அண்ணே உங்களுக்கு மரியாதை கொடுக்குறேன். நீங்க இப்படி பண்ணாதீங்க…’ என்கிறார். இப்படி கவுன்சிலருக்கும் கடைக்காரருக்கும் இடையில் வாக்குவாதம் தொடர்கிறது. கவுன்சிலரின் மாமூல் கலாட்டா வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.