காதலை கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக்கொலை செய்த அண்ணன் கைது

காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி தண்டபாணி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் மகள் வித்யா உள்ளனர். சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். சரவணனின் தங்கை வித்யா கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். வித்யாவும், திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் வித்யா வீட்டிற்கு தெரியவந்தது. வித்யா வீட்டிற்கு வெண்மணி வந்து பெண் கேட்டுள்ளார்.

இந்நிலையில்,கடந்த 30-ஆம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ விழுந்த நிலையில் காயத்துடன் வித்யா சடலமாக கிடந்தார். பீரோ விழுந்து வித்யா இறந்திருக்கலாம் என பெற்றோர் நினைத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வித்யாவின் பெற்றோரும், உறவினர்களும் உடலை அடக்கம் செய்தனர். வித்யா உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட அவரது காதலன் வெண்மணி அதிர்ச்சியடைந்தார். மேலும் காதலியின் சாவில் மர்மம் உள்ளது என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல கிராம நிர்வாக அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லடம் தாசில்தார் சபரிகிரி, கிராம நிர்வாக அதிகாரி பூங்கொடி மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வித்யா உடல் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதில் உடற்கூராய்வில் வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வித்யா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமநாயக்கன்பாளையம் காவல்துறை விசாரணையை தொடங்கினர். வித்யாவின் பெற்றோர் மற்றும் அவரது அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். விசாரணையில், எனது தங்கை மீது அதிக பாசம் வைத்திருந்தேன். அவரது காதல் விவகாரம் தெரியவந்ததும் கண்டித்தேன். காதலை கைவிட வேண்டும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினேன். ஆனால், தங்கை அதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று அறையில் வித்யா படுத்து இருந்தார். அப்போது, அரிவாளின் பின்பக்கத்தால் அவளது தலையில் பலமாக தாக்கினேன்.

இதில் அவள் சம்பவ இடத்திலேயே இறந்தாள். இதன்பின்னர் கொலையை மறைக்க பீரோ விழுந்து அவள் இறந்ததுபோல் சித்தரிக்க பீரோவை தலை மீது சாய்த்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து, சரவணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்ததால் தங்கையை, அண்ணனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனால் ஏற்பட்ட விபரீதம்..! அண்ணன் தங்கை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு..!

இன்றைய நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது. இன்று பல் முளைக்காத சின்னஞ்சிறு குழந்தை செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் படங்களை பார்த்தும் ரசிக்கிறது. குழந்தைகள் எப்போதும் செல்போனில் தான் விளையாடும்.

நாற்பது வயதில் பலர் மொபைல் போனில் புது, புது விசயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறும் நிலையில் என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும் என தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதியும் உண்டு. ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோ பசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.

ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள். எந்நேரமும் செல்போனிலேயே தங்கை மூழ்கி கிடந்ததால், அவருக்கு அண்ணன் அட்வைஸ் செய்துள்ளார். கடைசியில் இப்படியொரு கொடுமை கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் சோதிராயன்காடு பகுதியை சேர்ந்த தம்பதி ஜீவிதா சித்திரகுமார். இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும், 16 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் ஐடிஐ படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பவித்ரா மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் இரவு செல்போனை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாராம்.. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள். அப்போது மணி இரவு 11 ஆகிவிட்டது.. 11 மணிக்கு மேலும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த செல்போனை பறித்து, தூங்க செல்லுமாறு மணிகண்டன் அட்வைஸ் செய்துள்ளார்.. ஆனால், போனை திருப்பிக்கேட்டு அண்ணனிடம் சண்டை போட்டுள்ளார் பவித்ரா.

இந்த சண்டையில்தான், மணிகண்டன் செல்போனை கீழே போட்டு உடைத்துவிட்டதாக தெரிகிறது. செல்போன் தன்னுடைய கண்ணெதிரே உடைந்துவிட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார். மேலும், இதில் மனமுடைந்த பவித்ரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சொல்லிக்கொண்டே, வீட்டுக்கு பக்கத்திலிருந்த கிணற்றில் குதித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தன்னுடைய தங்கையை காப்பாற்றுவதற்காக அவரும் பின்னாடியே கிணற்றில் குதித்தார். ஆனால், அண்ணன், தங்கை இருவருமே தண்ணீரில் தத்தளிக்க துவங்கினார்கள். சிறிது நேரத்தில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பவித்ரா, மணிகண்டன் இருவரையும் சடலமாகவே மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து, மாத்தூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்காக, அண்ணன் தங்கையிடையே ஏற்பட்ட சண்டையில் இருவருமே கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தங்கை முறையுடைய +1 பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!

படிக்க வந்த இடத்தில், ஆசைவார்த்தை கூறி தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.

தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாமக்கல் சைல்டு லைன் அலுவலர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தியதில் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கராஜின் பெரியம்மா மகளான 16 வயது மாணவி, கடந்தாண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்ந்தார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி, சித்தி அங்காயி வீட்டில் தங்கி படித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியிடம் தங்கராஜ் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பமானார்.

இதை அறிந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால், மாத்திரை கிடைக்கவில்லை. இதனிடையே 10-ஆம் வகுப்பு படிப்பை முடித்த மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துவிட்டார். பின்னர், அங்குள்ள மகளிர் பள்ளியில் +1 சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு பெண் குழந்தையை மாணவி பிரசவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு தங்கராஜை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பப்பரப்பை ஏற்படுத்தியது.