ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த தாசில்தார்… மிரண்டு போன பெங்களூரு..!

நாட்டில் பல மாநிலங்களில் அரசுத்துறை பணியாளர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. அதுபோல இயக்கம் கர்நாடகாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு, அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி ஊழல் செய்த அரசு அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை காட்டிலும், அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அரசு அதிகாரிகள் பற்றிய தகவல்களை லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வந்தனர். அவர்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் பணிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படும் 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் பல்வேறு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கட்டுக்கட்டாக பணம், குவியல், குவியலாக தங்க நகைகள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. அப்படி சிக்கிய அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதில், பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வருபவர் அஜீத்குமார் ராய். இவரது வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் உள்ள வீடு, சந்திரா லே-அவுட்டில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் காவல்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது தாசில்தார் அஜீத்குமார் ராய்க்கு சொந்தமான 11 இடங்களிலும் இந்த சோதனை நடந்திருந்தது.

அப்போது தாசில்தார் அஜித்குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், 700 கிராம் தங்க நகைகள், 5 சொகுசு கார்கள், 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள், பிரபல நிறுவனங்களின் 65 கைக்கெடிகாரங்கள், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றியது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் சொத்து வாங்கி அவர் குவித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

தனது பெயரிலும், தன்னுடைய மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பினாமி பெயர்களில் தாசில்தார் சொத்துகள் வாங்கி குவித்து இருக்கிறார். அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் தற்போதைய மதிப்பு ரூ.300 கோடியில் 98 ஏக்கருக்கு நிலம் வாங்கி வைத்திருந்ததற்கான சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளது.

மேலும் கல்லூரு கிராமத்தில் 30 ஏக்கர் நிலமும், பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் 18 ஏக்கருக்கு பண்ணை வீட்டை அவர் வாங்கியதும் தெரியவந்தது. அதன் மூலம் தாசில்தார் அஜித்குமார் ராய் சட்டவிரோதமாக சுமார் ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தாசில்தார் அஜித்குமார் ராய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது உறுதியானதை தொடர்ந்து தாசில்தார் அஜித்குமார் ராயை லோக் ஆயுக்தா காவல்துறை அதிரடியாக கைது செய்தார்கள்.