சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு… அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி கைது…!

அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் பெரி செந்தில். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததால் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதாவது, கடந்த 2015-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது கார் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அதேபோல 2018-ம் ஆண்டும் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் ஆன நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இவரது வீட்டில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே இதில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முதலில் பெரி செந்திலின் செல்போன் அழைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சென்னையை சேர்ந்த மாதவன் எனும் நபரிடம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முன்பு அடிக்கடி போனில் பெரி செந்தில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே மாதவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது, தன்னை பந்தாவாக காட்டிக்கொள்ளவும், மீண்டும் காவல்துறை பாதுகாப்பை பெற்று பாஜகவின் மாநில, தேசிய நிர்வாகிகள் மத்தியில் தன்னுடைய பெயரை கொண்டு செல்லவும் பெரி செந்தில், அவரது தம்பி ராஜீவ் காந்தி மற்றும் அவருடைய மகன் மணிகண்ட சந்துரு ஆகியோர் திட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்கள். அதன்படி, தங்களது வீட்டுக்கு தாங்களே பெட்ரோல் குண்டை வீசுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவை அமல்படுத்த மாதவன் சென்னையிலிருந்து வரவைக்கப்பட்டு திட்டமிட்டபடி மாதவன் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதை பெரி செந்தில் வீட்டினுள் வீசியுள்ளார். இந்த தகவல் மாதவன் காவல்துறையினரிடம் ஒப்புக்கொள்ள, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாதவன் சொன்ன தகவலை உறுதி செய்ய பெரி செந்திலின் மகன் மணிகண்ட சந்துருவை காவல் துறை விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து பெரி செந்திலும், ராஜீவ் காந்தியும் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் காவல்துறை தீவிரமாக தேடுதல் நடத்தி தேனியில் பதுங்கியிருந்த பெரி செந்திலை காவல்துறை கைது செய்தது.

மேலும் ராஜீவ் காந்தி மட்டும் இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த 2015 மற்றும் 2018-ம் ஆண்டு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் போலி என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாஜகவின் மாநில தலைமை மற்றும் தேசிய தலைமை மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அகில பாரத இந்து மகா சபையின் மாநில பொதுச்செயலாளர் தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.