டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டு முதலமைச்சர ஹேமந்த் சோரன் ஆகியோர் கைதை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சியின் கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ராகுல் காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதனை அறிவித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தில் பங்கேற்பார்” என தெரிவித்திருந்தார்.
I.N.D.I.A. கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந் சிங் மான், அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசுகையில், “சிறையில் கெஜ்ரிவால் சாப்பிடும் ஒவ்வொரு சோறும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. குற்றத்திற்கான ஆதாரம் இல்லாமல் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது சர்வாதிகாரம். கெஜ்ரிவாலையும், ஹேமந்த் சோரனையும் சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாமலேயே சிறையில் அடைத்துள்ளனர். இது ஒரு சர்வாதிகாரம். என் கணவரின் தவறு என்ன? நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்கியதா?.
தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது. அவர் ஒரு முன்னாள் ஐஐடி மாணவர். அவர் நினைத்திருந்தால் வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனால் அவர் தேசபக்திக்கு முன்னுரிமை கொடுத்தார். ஐஆர்எஸ் ஆக இருந்த அவர் பொது சேவை செய்ய பணியை ராஜினாமா செய்தார். தற்போது மக்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு அதிகார ஆசை இல்லை. அவர் நாட்டுக்கு சேவை செய்யவே விரும்புகிறார். என் கணவர் சிங்கம். சிறையில் இருக்கும்போதும் நாட்டைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். கெஜ்ரிவால் ஒரு சர்க்கரை நோயாளி. அவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு திகார் சிறையில் இன்சுலின் வழங்கப்படவில்லை. ஏனெனில் அவரை கொல்ல விரும்புகிறார்கள்” எனசுனிதா கெஜ்ரிவால் பேசினார்.