Sukanya Sharma: ஆக்ரா ரயில் நிலையத்தில் இந்தப் பகுதியில் நான் மட்டும் தான் இருக்கிறேன்…! உங்கள் உதவி தேவை…!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெற்று கொண்டே உள்ளது. அதை சரி செய்வதற்காக பெண் காவல் உதவி ஆணையர் ஆக்சனில் இறங்கியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை சோதனை செய்வதற்காக, அவர் இரவில் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்துள்ளார். இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்தப் பிரச்னையில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதை சரி செய்யும் வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பெண் காவலர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத ஒன்றை செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா காவல் உதவி ஆணையராக இருப்பவர் சுகன்யா ஷர்மா. இவர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, இரவு முழுவதும் செய்த ஒரு அண்டர் கவர் ஆபரேஷனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காவல் உதவி ஆணையர் சுகன்யா ஷர்மா, சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணித்து, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்துள்ளார். முதலில் ஆக்ரா ரயில் நிலையம் முன்பு சென்ற அவர், அங்கிருந்து காவல்துறை உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார்.

அப்போது, “இந்தப் பகுதியில் நான் மட்டும் தான் இருக்கிறேன். எனக்கு பாதுகாப்பாக தெரியவில்லை. உங்கள் உதவி தேவை.” என்று சொல்லியுள்ளார். அதற்கு எதிரில் பேசியவர்கள், “அங்கேயே காத்திருங்கள். உங்கள் லொகேஷனை டிராக் செய்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சுகன்யாவுக்கு தொடர்பு கொண்டு, “நாங்கள் அங்குதான் வந்து கொண்டிருக்கிறோம்.” என்று சொல்லியுள்ளனர்.

இதையடுத்து காவல் உதவி ஆணையர் சுகன்யா ஷர்மா ஆட்டோவில் பயணிக்கும்போது, அந்த ஆட்டோ டிரைவரிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர் முதலில் அவர் சுற்றுலா பயணி தானே என்று சீருடை அணியாமல் இருந்துள்ளார். பிறகு காவல் உதவி ஆணையர் சுகன்யா ஷர்மா காவலர் என தெரிந்தவுடன் அவர் அவசர அவசரமாக சீருடை எடுத்து அணிந்துள்ளார். மேலும் கூட்டம் அதிகமுள்ள முக்கியமான பகுதியில் ஆய்வு செய்துள்ளார். காவல் உதவி ஆணையராக சுகன்யா ஷர்மாவின் நடவடிக்கை குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.