Sharad Pawar: மோடி பா.ஜ.கவின் பிரதமர்..! இந்தியாவின் பிரதமர் அல்ல..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி வேட்பாளர் சந்திரகாந்த கைரேவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல் ஜல்னா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண் காலேவை ஆதரித்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, ” நான் பிரச்சாரத்திற்கு வரும் போது பிரதமர் மோடியின் பேச்சை கேட்டபோது அவர் நாட்டின் பிரதமர் அல்ல பா.ஜ.கவின் பிரதமர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரதமர் மோடியும் பா.ஜ.கவும் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்?. ஆனால் இவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், ராகுல் காந்தியையும், என்னையும் விமர்சித்து வருகிறார்கள் என சரத்பவார் பேசினார்.