2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து 400 இடங்களில் வென்றிருந்தால் இந்திய அரசியல் சாசனத்தையே அழித்து இருப்பார்கள் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி பேசுகையில், 400 இடங்களில் வெல்வோம் என பாஜக தொடர்ந்து பிரசாரம் செய்தது. ஆனால் பாஜகவின் முயற்சியை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முறியடித்தன. பாஜக மட்டும் தனித்தே 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், இடஒதுக்கீட்டையே அழித்திருப்பார்கள்; அரசியல் சாசனத்தையே மாற்றி இருப்பார்கள்.
இப்போது அறிவித்ததைப் போல ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கமாட்டார்கள். தற்போதும் கூட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தியதால்தான் பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இல்லை எனில் இந்த அறிவிப்பும் வெளியாகி இருக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை கடுமையாக எதிர்த்தவர் பிரதமர் மோடியும் பாஜகவும்தான். உச்ச நீதிமன்றத்திலேயே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே முடியாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததும் மத்திய அரசுதான். தற்போது நிலையை மாற்றிக் கொண்டது பாஜக. காரணம், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால்தான்.
தற்போதைய அறிவிப்பின் மூலம், ஜாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா முன்னோடி மாநிலம் என மோடியே ஒப்புக் கொண்டுவிட்டார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையை மோடி ஏற்றுக் கொண்டுவிட்டார். இடஒதுக்கீட்டை அதிகரிக்க போதுமான தரவுகள் தேவை என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்த தரவுகள் கிடைக்கும். இடஒதுக்கீடு அதிகரிக்கும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.