திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலின் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் ஆந்திர அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன.
இது குறித்து RSS அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான Organizer ஆங்கில இதழிலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசாங்கங்களால் கோயில்கள் நிர்வாகிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், பல நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக தமிழ்நாட்டின் கோயில்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
Organizer இதழில், கோயில்களின் நிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்குள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான 400 கோயில்கள் சனாதனத்தின் சின்னங்களாக அமைந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் நகைகள் பிரம்மாண்டமான அளவில் கடந்த 70 வருடங்களாக ஊழலில் சிக்கியுள்ளன. சுமார் 50,000 ஏக்கர் கோயில் நிலங்கள் அரசு நிர்வாகத்தில் காணாமல் போயுள்ளன.
பல கோயில்களுக்கு சட்டப்படியான எந்த அரசு உத்தரவும் இன்றி, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமநாதபுரத்தின் ராமநாதசுவாமி கோயில், சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில், திருச்சியின் தாயுமானசுவாமி கோயில் ஆகியவற்றை அரசு நிர்வகிக்க இடப்பட்ட உத்தரவுகள் இல்லை என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.