ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்தபோது, பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? பிரதமர் மோடி உண்மையில் ‘56’ அங்குல மார்பு உடையவராக இருந்தால், இந்தியாவுக்கு சொந்தமான நிலத்தை சீனா ஆக்கிரிமித்ததை அனுமதித்தது ஏன்? இந்திய நிலத்தின் பெரும்பகுதியை சீனாவுக்கு ஏன் தாரை வார்த்தீர்கள்? அவர்கள் எல்லைக்குள் ஊடுருவி உள்ளே வருகிறார்கள், ஆனால் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போது நீங்கள் தூக்க மாத்திரை விழுங்கி இருந்தீர்களா? அல்லது அவர்கள் உங்களுக்கு போதை மருந்துகளை கொடுத்தார்களா? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், மிகப் பெரிய வாஷிங் மெஷின் உள்ளது. எங்களிடம் இருக்கும் வரை அவர்கள் ஊழல் செய்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் உங்களிடம் வந்த பிறகு அவர்கள் ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்தப்படுகின்றனர்.
மோடி பொய்யர்களின் தலைவர். அமலாக்க இயக்குனரகம், வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறார். தேர்தல் நேரத்தில் சோனியா காந்தி தனது கணவரை இழந்தார். அப்போது கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. கட்சியினர் அவரைப் பிரதமராக்கச் சொன்னார்கள். ஆனால் அவர் ஒரு பொருளாதார நிபுணரை நாட்டின் பிரதமராக்கினார்’ என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.