LK. சுதீஷ் புலம்பல்: ராஜ்யசபா சீட் வாக்குறுதியை நம்பித்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.. !

அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரும் என வாக்குறுதி அளித்தது… அதிமுகவின் வாக்குறுதியை நம்பித்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தேமுதிகவின் பொருளாளர் LK. சுதீஷ் தெரிவித்து அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளார்.

தேமுதிகவைப் பொறுத்தவரையில் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட் பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பது நீண்டகால கனவு. இதனால் எந்த கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதை இடைவிடாமல் தேமுதிக முன்வைத்து வருகிறது. அதிமுக- தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை நம்பியே 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் எனவும் பிரேமலதா அறிவித்தார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக நாங்கள் உறுதி அளிக்கவே இல்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதனால் தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் LK. சுதீஷ் செய்தியாளர்களின் கேள்விக்கு பதியளித்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் என அதிமுக உறுதி அளித்தது உண்மைதான். அதனை நம்பித்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தேன். தற்போது அதிமுக, அதனை மறுத்து வருகிறது. உரிய நேரம் வரும் போது அனைத்து உண்மைகளையும் பகிரங்கப்படுத்துவோம். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகிறேன் என LK. சுதீஷ் தெரிவித்தார்.