ஷூரா கவுன்சில் அறிவிப்பு : ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு..!

லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட இருந்த ஹஷெம் சஃபீதினும் அடுத்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லாவின் வழக்கமான நடைமுறைப்படி ஷூரா கவுன்சில் கூடி நைம் காசிமை பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டில், டிக் டாக்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்..!

ஈரானில், இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரப்போவதாக ஈரான் ராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது. ஈரான் ராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என குறிப்பிட்டு உள்ளனர்.

முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3-வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் நாட்டு அரசு தனது ராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்ற தகவல் கசிந்தது உள்ளது.

தமிழக அரசு தகவல்: சவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்..!

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நிர்வாக இயக்குநர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பில், சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் BSc., நர்சிங்கில் தேர்ச்சி பெற்று 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 13.11.2024 முதல் 15.11.2024 வரை கொச்சியில் நடைபெற உள்ளது.

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in-ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் என்ற 9566239685, 6379179200, 044-22505886/ 044-22502267 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வலைதளத்தில் தவறாமல் பதிவு செய்துகொண்டு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

அமெரிக்கா அதிரடி: சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் நாடு கடத்தல்..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவிய இந்தியர்களை வாடகை விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு நிதியாண்டில் மட்டும் சட்டவிரோதமாக நுழைந்த 29 லட்சம் பேரில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்தியர்கள் மட்டும் 90,415 பேர் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அமெரிக்க அரசு அவர்களின் சொந்த நாட்டிற்கே நாடு கடத்தி வருகிறது. இதன்படி கடந்த 2024-ஆம் நிதியாண்டில், இந்தியா உட்பட 145-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.60 லட்சம் பேரை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. கடந்த 22-ஆம் தேதி கூட தனி வாடகை விமானம் மூலம் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அறிவிப்பு: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவம் தாக்குதல் முடித்துவிட்டோம்..!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2-வது வீடியோவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும்.

நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை..!

இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில், RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. எனவே, கனடாவில் அதைத் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்கவேண்டும். சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பேசினர். அப்போது, “இந்தியாவிலுள்ள RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. அதை கனடாவில் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஓட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் பேசுகையில்,, “இந்தியாவுக்கு ஆயுதங்கள், ராணுவத்தள வாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்தவேண்டும். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடா வருவதற்கு தடை செய்யவேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும்” என்றார். அவையில் என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில்,, “RSS அமைப்பானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை, தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை RSS செயல்படுகிறது. அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்’’ என ஜக்மீத் சிங் பேசினார்.

 

தென் கொரியா தகவல்: ரஷ்யாவுக்கு 3 ஆயிரம் ராணுவ வீரர்களை வட கொரியா அனுப்பியாதா..!?

உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய தேசிய புலனாய்வு நிறுவனம், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொத்தம் சுமார் 10,000 துருப்புக்களை வழங்குவதாக வட கொரியா உறுதியளித்துள்ளது. அவர்கள் அனைவரும் வரும் டிசம்பருக்குள் அனுப்பப்பட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா தனது ராணுவ வீரர்களை கப்பல் மூலம் அனுப்பி உள்ளது. முன்னதாக, வட கொரியாவுக்குள் துருப்புக்கள் பயிற்சி பெற்றதற்கான அறிகுறிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கண்டறியப்பட்டன. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட வட கொரிய துருப்புகள், அங்கு பல்வேறு பயிற்சி நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் களமிறக்கப்படுவார்கள் என தென் கொரியா குறிப்பிட்டனர்.

விளாதிமிர் பூட்டின் அழைப்பு: சென்னை-ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம்..!

சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த 22 -ஆம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டினை சந்தித்து பேசினார். 2-வது நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் பேசுகையில், “அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் சார்பில் புதிய பணப் பரிமாற்றத்தை உருவாக்க வேண்டும். குளோபல் சவுத், குளோபல் ஈஸ்ட் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். வடக்கு கடல் வழி மற்றும் வடக்கு- தெற்கு சர்வதேச போக்குவரத்து திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் இணையலாம்” என விளாதிமிர் பூட்டின் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் சர்வதேச கடல்வழி சரக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண ஆர்டிக் கடல் சார்ந்த வடக்கு கடல் வழித் திட்டத்துக்கு ரஷ்யா முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சென்னை, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டு உள்ளன. புதிய கடல் வழி திட்டம் தொடர்பாக டெல்லியில் அண்மையில் இந்திய, ரஷ்ய உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்டிக் கடல் பகுதியில் பனிக்கட்டிகளை உடைத்து செல்லும் சரக்கு கப்பல்களை வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி ரஷ்ய அரசு நிறுவனமான ரோசோடோமுக்காக இந்தியாவில் 4 அதிநவீன கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6,000 கோடி ஆகும். மேலும் ஆர்டிக் கடல் பகுதியில் சரக்கு கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் ரஷ்யா உறுதி அளித்தது. இந்த சூழலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது வடக்கு கடல் வழி திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் இணையலாம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் பூட்டின் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

கமலா ஹாரிஸ் விமர்சனம்: அதிபர் பதவிக்கு டோனால்ட் டிரம்ப் தகுதியற்றவர்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பளராக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலா ஹாரிஸ் நேற்று பேசுகையில், “அமெரிக்க அரசியலமைப்புக்கு விசுவாசமாக செயல்படும் ராணுவத்தை டோனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. சர்வாதிகாரியாக செயல்பட நினைக்கும் டோனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்” என கமலா ஹாரிஸ் பேசினார்.

வீட்டு வேலைகள் செய்யும் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் அறிமுகம்..!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துடன் குழந்தைகளை கவனிப்பது முதல் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியது மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.

நாளை பொது இடங்களில் மனிதர்களுடன், மனித உருவ ரோபோக்களும் நடமாடும் வகையில் தான் எதிர்காலம் இருக்கும் எனவே எலான் மஸ்க். அதற்கான விதையை விதைத்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்ந்து தற்போது அவர் ரோபோ, தானியங்கி வாகனங்களில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ‘வீ ரோபோ’ எனும் நிகழ்ச்சியில் அதிநவீன மனித உருவ ரோபோவை மஸ்க் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ‘ஆப்டிமஸ்’ எனப்படும் இந்த ரோபோ எதிர்காலத்தில் நமது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கப் போகிறார் என மஸ்க் தெரிவித்தார். ஏற்கனவே மனிதனுக்கு உதவ பல ரோபோக்கள் இருந்தாலும், ஆப்டிமஸ் அசாத்திய வேகத்தில் சிந்தித்து செயல்படக் கூடிய ரோபோவாக இருக்கும் என மஸ்க் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள புற்களை வெட்டுவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது, வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, சமையல் செய்வது, பரிமாறுவது என அனைத்து வேலைகளையும் இந்த ரோபோ செய்யக் கூடிய திறமை வாய்ந்தது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் கண்ணாடி கிளாசில் குளிர்பானங்களை நிரப்பி பார்வையாளர்களுக்கு பரிமாறி அசத்தின.

மேலும், மக்களிடம் உரையாடிய ஆப்டிமஸ், பிறந்தநாள் வாழ்த்து பாடல்களையும் பாடி பிரமிக்க வைத்தன. பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிலளித்து பாராட்டுகளையும் பெற்றன. இந்த ரோபா 20,000 அமெரிக்க டாலரில் தொடங்கி 30,000 டாலர் வரையிலும் இருக்கும் என மஸ்க் கூறி உள்ளார்.