மு.க.ஸ்டாலின்: “பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று பேரறிஞர் அண்ணா சொல்லுவாரே! அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருப்பெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, ’வாழ்வு’ மூன்று எழுத்து – வாழ்வுக்குத் தேவையான ’பண்பு’ மூன்றெழுத்து -பண்பிலே பிறக்கும் ’அன்பு’க்கு மூன்றெழுத்து – அன்பிலே சுரக்கும் ’காதல்’ மூன்றெழுத்து – காதல் விளைவிக்கும் – ’வீரம்’ மூன்றெழுத்து – வீரர் செல்லும் ’களம்’ மூன்றெழுத்து – களத்திலே பெறும் ’வெற்றி’ மூன்றெழுத்து – அந்த வெற்றிக்கு – நம்மை அழைத்துச் செல்லும் ’அண்ணா’ மூன்றெழுத்து! என்று தலைவர் கலைஞர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் புகழ்ந்தார்! அந்த அண்ணனைத் தமிழ்த்தாய்க்குத் தந்த காஞ்சிக்கு வந்துள்ளேன்!

நம்முடைய தலைவர் கலைஞர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருந்தாலும், அவர் நிறைவுக்கு முன் எழுதியது, மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுஜர் பற்றி தான்! அந்த மகான் பிறந்த திருப்பெரும்புதூரையும் உள்ளடக்கிய பரப்புரைக் கூட்டமாக இது அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் – திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கான பரப்புரைக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்! அனைவருக்கும் வணக்கம்!

திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு அவர்கள் போட்டியிடுகிறார். பாலுவை உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1986 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்! 17 வயதில் தீவிர அரசியலுக்குள் நுழைந்து, இன்று வரை, ஒரே கொடி! ஒரே இயக்கம்! ஒரே தலைமை! என்று பாதை மாறாத பயணமாகத் தனது கொள்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். மூன்று முறை ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் சாதனைகளைச் சொல்ல எனக்கு நேரம் போதாது, அதை அவரே புத்தகமாகப் போட்டிருக்கிறார். அத்தகைய பாலுவை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது உங்கள் கடமை! என் கெழுதகை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களுக்குத் திருப்பெரும்புதூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு, திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளராகச் செல்வம் அவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது தந்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், இளைஞரணி உட்பட கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு தன்னுடைய உழைப்பாலும் மக்கள் தொண்டாலும் உங்களது உள்ளங்களில் இடம்பிடித்திருக்கிறார். மிகவும் அமைதியான குணமுடையவர்! எல்லாவற்றிற்கும் மேல் மக்களிடம் நற்பெயர் பெற்றவர். இவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மக்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும்.

இந்த இரண்டு வேட்பாளர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டும் இல்லை. இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடம் இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப்பிறகு என்ன? வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காரலாம்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை நான் மேற்கொண்டேன். இதே கரசங்கால் பகுதியில் நடந்த கூட்டத்திலும் பங்கேற்றேன். அந்தக் கூட்ட மேடையில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு, அதில் மக்களது கோரிக்கைகளைப் பெற்றேன். “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காண்பேன்” என வாக்குறுதி கொடுத்தேன். ஆட்சிக்கு வந்த உடனே இதற்காகவே தனித்துறையை உருவாக்கி, கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்திக் காட்டிய நெஞ்சுறுதியுடன் உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன்.
அந்த பணியை முடித்தவுடன் நிற்கவில்லை, ’முதல்வரின் முகவரி’ என்ற பெயரில், கோட்டைக்கு எனக்கு வரும் மனுக்களுக்குத் தீர்வுகாண தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சேவைகளை ஒரு குடையின்கீழ் கொடுக்கும் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி காட்டினோம்.

நமது திராவிட மாடல் அரசின் கொள்கை ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘அனைத்து மாவட்டங்களுக்குமான சீரான வளர்ச்சி’. இதனால்தான், நான் ஆட்சிக்கு வந்தவுடன் கூறினேன். ”இது தனிப்பட்ட ஸ்டாலினின் ஆட்சி இல்லை, ஓர் இனத்தின் ஆட்சி”என்று பெருமையோடு சொன்னேன்.

ஒவ்வொரு தனிமனிதரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்துப் பார்த்து அவங்களின் தேவைகளை நிறைவேற்றித் தரப் பாடுபடுகிறோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனை திட்டங்கள்! இந்தியாவே பாராட்டுகிறது! இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நமது திட்டங்களைப் பின்தொடர்கிறது! 2021 தேர்தல் அறிக்கையில், கூறிய திட்டங்கள் மட்டுமல்ல; சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவன்தான் இதோ உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

ஆட்சிக்கு வந்தவுடன் தொழில்வளத்தைப் பெருக்க, தொழில் முனைவோர்களுடன் கூட்டம் நடத்தினேன். அதில் அவர்கள் கேட்டுக்கொண்டது, நம்முடைய இளைஞர்கள் வேலை பெற, திறன்பயிற்சி தேவை என்று சொன்னவுடன், அதற்கான திட்டத்தை உருவாக்க ஆணையிட்டேன். அப்படி உருவாக்கிய திட்டம்தான், ’நான் முதல்வன் திட்டம்!’ அந்த திட்டத்தின் மூலம், இதுவரை 28 இலட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி இருக்கிறோம்.

திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டுமல்ல, அந்தத் திட்டம் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு, அந்த திறன்பயிற்சி எடுத்த இளைஞர்களின் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தினேன். அந்தக் கூட்டத்தில், பேசிய ஒரு மாணவி கூறினார்கள், ”இந்த நான் முதல்வன் திட்டத்தால், எனக்கு எல்லாத் துறைகளைச் சார்ந்தும், படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது! அதனால் முதல் இண்டர்வியூ-இல் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில், அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது”என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.

இன்னொரு மாணவர் கூறினார், “இன்றைக்கு நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி, எங்களுக்குப் பயிற்சி வேண்டும்! வசதி இருக்கின்றவர்களால் வெளியே நிறைய பணம் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் – டிரெயினிங் செண்டர் என்று சென்று படிக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை அரசுக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்குவது இந்த நான் முதல்வன் திட்டம் எங்கள் கனவுகளுக்கான வாசல்களைத் திறந்து விடுகிறது”என்று பூரிப்போடு சொன்னார். அதனால்தான், இந்த நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கியபோது, என்னுடைய கனவுத்திட்டம் என்று சொன்னேன். இப்போது நம்முடைய கனவுகளை நனவாக்கும் திட்டமாக மாறி இருக்கிறது! இதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை!

இதே போன்று, இன்னொரு புரட்சிகரத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! அதற்கும் நான் எதிர்கொண்ட அனுபவம்தான் காரணம்! சென்னையில், ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்ட்டீங்களா”என்று எதார்த்தமாகக் கேட்டேன். அதற்கு அந்தக் குழந்தை ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய மாட்டார்கள், அதனால் சாப்பிடவில்லை”என்று சொன்னதும், அதிகாரிகளை அழைத்தேன்.

”பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் கொண்டு வரவேண்டும்! திட்டத்தைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அதுவும் இல்லாமல், இது நம்முடைய தேர்தல் அறிக்கையில் கூட சொல்லவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன். “வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்காலத் தலைமுறை குழந்தைகள்தான்! அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு, நல்ல உடல்நலத்தோடு இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும்! இதை நாம் கண்டிப்பாகச் செய்யவேண்டும். நிதிநிலை சரிசெய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் ஃபைலைத் தயார் செய்யுங்கள்”என்று உத்தரவு போட்டேன். இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.

அடுத்த சாதனைத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம்! தாய்மார்கள் இன்றைக்கு நமக்கு இவ்வளவு ஆதரவு தரக் காரணமான திட்டம்! தொலைக்காட்சியில் சகோதரி ஒருவர் பேசும் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அந்தச் சகோதரி சொல்கிறார். ”வீட்டில் அத்தனை வேலையும் செய்வோம். ஆனால், வெளியில் யாராவது எங்களைப் பற்றி வீட்டுக்காரரிடம் கேட்டால், அவர், நான் வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்’என்று கூறுவார்! என்னதான் வேலை செய்தாலும், என்னுடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது. ஆத்திர அவசரத்திற்கு ஒரு ரூபாய் இருக்காது. வீட்டுக்காரரிடம் கேட்கவும் தோன்றாது! ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் அண்ணன் தரும் ஆயிரம் ரூபாய், என்னுடைய சுயமரியாதைக்குக் கொடுக்கும் அங்கீகாரம்’என்று கண்ணில் நம்பிக்கையுடன் கூறிய அந்தத் தாய்மார் போன்று, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள், ’எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்’ மாதம் ஆயிரம் ரூபாய் என்று உரிமையோடு சொல்லும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

அதுமட்டுமல்ல, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளில் இருந்து, “மகளிர் சுதந்திரமாக, ஸ்டாலின் அய்யா பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறோம்” என்று சொல்லும், விடியல் பயணத் திட்டம்!

அதேபோன்று, ஒரு பெண் குழந்தை படித்தால், ஒரு தலைமுறையே படித்ததற்குச் சமம்! பெண் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்கு வரும் என்னுடைய 4 இலட்சத்து 81 ஆயிரத்து 75 மகள்களுக்கு ஆயிரம் ரூபாய் தரும், ’புதுமைப் பெண் திட்டம்’!

மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப் போகும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!

வெளியூரில் வேலைக்குப் போகும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ’தோழி விடுதி’ திட்டம்!

ஒரு கோடி பேருக்கும் மேல் பயனடைந்திருக்கும் ”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்!

2 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிரைக் காப்பாற்றி அவர்கள் குடும்பங்களையும் காப்பாற்றி இருக்கும் ’இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்!

இன்னும் சொல்லலாம்! நிறைய இருக்கிறது! அதற்குப்பிறகு, இது சாதனை விளக்கப் பொதுக்கூட்டமாக மாறிவிடும்! எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு நன்மை செய்யவது மட்டும்தான், நம்முடைய ஒரே குறிக்கோள்! இப்படி பார்த்துப் பார்த்து, தமிழ்நாட்டை முன்னேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? ’நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா’என்று கேட்கிறார். பழனிசாமி அவர்களே…! உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதற்கு தெரியுமா? படத்தில் ஒரு டைலாக் வருமே, ’நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’என்று அதற்கு ஏற்ற மாதிரி, நீங்கள் இருக்கிறீர்கள் என்று பி.ஜே.பி. அரசு உங்களுக்கு விருது கொடுத்திருக்கும்!

நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம் பழனிசாமி அவர்களே… கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும், பாராட்டையும் பெறுகிறோமே! அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய விருது! இன்னொரு விருது காத்திருக்கிறது! ஜூன் 4-ஆம் தேதி ”நாற்பதுக்கு நாப்பது”என்ற விருது.

பழனிசாமி அவர்களே! wait and see! நீங்கள் பாழ்படுத்திய நிர்வாகத்தைச் சரிசெய்து தி.மு.க. அரசு, தமிழ்நாட்டை ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாடு எதில் எல்லாம் நம்பர் ஒன் தெரியுமா? பட்டுக்கும் – நெசவுக்கும் பெயர் போன காஞ்சி மண்ணில் சொல்கிறேன். ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ தோல் பொருட்கள் ஏற்றுமதியில், ’நம்பர் ஒன்!’ ஏற்றுமதி ஆயத்தநிலைக் குறியீட்டில் ’நம்பர் ஒன்!’ எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் ’நம்பர் ஒன்!’ கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில், ’நம்பர் ஒன்!’ மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பில், ’நம்பர் ஒன்!’ 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், ’நம்பர் ஒன்!’ இப்போது நான் சொன்னது எல்லாம் நாங்கள் எடுத்த புள்ளிவிவரம் இல்லை, ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!

பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14- வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை, தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறோம். மாண்புமிகு அன்பரசன் இருக்கிறார். அவரது துறையில், ஸ்டார்ட்-அப் இந்தியா தரவரிசையில் பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாட்டை நம்முடைய ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், LEADER ஆக்கி இப்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டோம்.

எந்த சமூக – பொருளாதாரக் குறியீட்டை எடுத்துப் பார்த்தாலும், அதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத்தான் இருக்கும்! பழனிசாமி அவர்களே! நீங்கள் எதில் ’நம்பர் ஒன்’ தெரியுமா? பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டு உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தீர்களே, அதில் மட்டும்தான் ’நம்பர் ஒன்!’ எப்படியெல்லாம் பிரதமர் மோடிக்கு – ஒன்றிய அமைச்சர்களுக்கு – பா.ஜ.க.வுக்கு லாவணி பாடினீர்கள்! ‘மோடிதான் எங்கள் டாடி’என்று சொன்னீர்களே!

அதுமட்டுமல்ல, பா.ஜ.க. இங்கு, இந்தியைத் திணித்தபோது நாம் எதிர்த்தோம். ஆனால், அ.தி.மு.க. அமைச்சர் என்ன சொன்னார்? அண்ணா மும்மொழிக் கொள்கையை ஆதரித்தார் என்று பச்சைப்பொய்களைப் பேசவைத்து அழகு பார்த்த பச்சோந்திதான், இந்தப் பழனிசாமி! அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் இயற்கைக் கூட்டணி என்று சொல்லி, செண்டிமெண்ட் மழை பொழிந்தவர்கள்தான் பழனிசாமி நாடக கம்பெனி!

இப்போது பிரிந்தது போன்று நாடகம் போடும் பழனிசாமி, இன்றைக்கு ஒரு பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஒருவேளை, அ.தி.மு.க சில இடங்களில் வென்று பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒப்புக்காகக் கூட “ஆதரிக்க மாட்டோம்”என்று பழனிசாமி பதில் சொல்லவில்லை. “பொறுத்திருந்து பாருங்கள்”என்று வாய்தா வாங்கியிருக்கிறார் பழனிசாமி! இதுதான் அவரின் பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம்!

எங்கேயாவது “பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி” என்று பழனிசாமி சொல்லியிருக்கிறாரா? பா.ஜ.க.வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று ஏன் அவரால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை! ஏன் என்றால், முதுகு வளைந்து பாதம் தாங்கும் பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது என்பதே உண்மை! அ.தி.மு.க.வுக்குப் போடும் வாக்கு என்பது, பா.ஜ.க.வுக்கான வாக்குதான்! பழனிசாமியின் பகல் வேஷங்களும் – பச்சைப்பொய்களும் இனி தமிழ்நாட்டு மக்களிடம் எப்போதும் எடுபடாது! இப்போது, நாட்டு மக்கள் இந்தியாவின் எதிர்காலம் இந்தியா கூட்டணியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில், இருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது! மக்களிடம் இருந்து, மக்களுக்காகப் பணியாற்றிப் பெற்றுள்ள நம்பிக்கை இது! தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறோம்! பெரிய பட்டியலே இருக்கிறது!

உதாரணத்திற்கு நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள், மூன்று முக்கியமான துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளை மட்டும் சொல்லலாமா?

ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக பாலு இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு மட்டுமே 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தன.

இதுமட்டுமா! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், பாடி பாலம்! அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே, 335 பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறோம். அதனால்தான், தலைவர் கலைஞரே ’பாலம்’ பாலு என்று அழைத்தார். இதுபோன்ற சாதனைகள் தொடர, ஒன்றியத்தில் நாம் ஆட்சியில் இருக்கவேண்டும். அதற்காகத்தான், இந்த தேர்தலின் ஹீராவான தேர்தல் அறிக்கையை தி.மு.க.வும் – காங்கிரசும் வெளியிட்டிருக்கிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது. அதில், முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!

பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!

ஒன்றியத்தில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த சட்டத்திருத்தம்!

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை!

ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு பதிலாகப் புதிய சட்டம்!

விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது!

பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரங்கள், மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு!

விவசாயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!

இப்படி மாநிலங்களுக்கும் – நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. அதேபோல், தி.மு.க.வின் வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரை ஆறுவழிச் சாலையாக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்!

அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்குக் காஞ்சிபுரம் வழியாக செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும்!

செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி உற்பத்தி தொடங்க உரிய நடவடிக்கை!

பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்களும் – ஜி.எஸ்.டி. சட்டமும் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கடன் தள்ளுபடி!

மாணவர்களுக்கான கல்விக்கடன் தள்ளுபடி!

மக்களைச் சுரண்டும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஏழைகளிடமிருந்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பறித்த அவலநிலையைப் போக்க, அபராதம் விதிக்கும் முறை நீக்கப்படும்!

இப்படி நாம் நம்முடைய வாக்குறுதிகளையும் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் முன்வைத்து, ஆதரவு கேட்கிறோம்! வாக்கு கேட்கிறோம்!

ஆனால், மிக உயரிய பொறுப்பில் இருந்துகொண்டு, பிரதமர் மோடி எல்லாக் கூட்டங்களிலும் மிகவும் மலிவான – பிரிவினைவாத அரசியலை செய்துகொண்டு இருக்கிறார். சாதி – மதம் – உணவு என்று மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்றுதான், மோடி அவர்களின் மூளை சதாசர்வ காலமும் சிந்திக்கிறது.

இப்படி மக்களைப் பிளவுப்படுத்தச் சிந்திப்பதில் ஒரு விழுக்காடாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்து இருக்கிறாரா! மோடி? சிந்தித்து இருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்குமா? வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கும். ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில், எல்லாத் தரப்பு மக்களுக்கும் போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டதே! தனிமனிதர்கள் தொடங்கி மாநிலங்கள் வரை, எல்லோரையும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் கூட போராட வைத்திருக்கிறார்.

12 ஆண்டுகாலம் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்குப் பிரதமர் ஆனதும், மாநிலங்களைக் கண்டாலே பிடிக்கவில்லை. பிரதமர் ஆனவுடன் என்ன சொன்னார்? “மாநில முதலமைச்சராக இருந்ததால், எனக்கு மாநிலங்களின் பிரச்சினையும் தெரியும்! தேசத்தின் பிரச்சினையும் தெரியும்!”என்று சொன்னார். ஆனால், என்ன செய்கிறார்? ஆளுநர்களை வைத்து, மாநிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையைக் கொடுப்பதே மோடிதான்! ஒட்டுமொத்த தேசத்திற்கும், பிரதமர் மோடிதான் மிகப்பெரிய பிரச்சினை!

“பேச நா இரண்டுடையாய் போற்றி”என்று பேரறிஞர் அண்ணா சொல்லுவாரே! அதற்கு ‘வாழும் உதாரணம்’ மோடிதான்! பிரதமர் மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பே இருக்காது. ‘நாரி சக்தி’என்று பெண்களை மதிப்பதாக வீரவசனம் எல்லாம் பேசுவார். மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை! மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மனச்சாட்சி இருக்கும் யாரும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள்! அந்த பெண்களுக்கான நீதி எங்கே? குஜராத் வன்முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு அவர்கள் போராடிப் பெற்ற நீதியைக் கூட, குற்றவாளிகளின் விடுதலை மூலமாகக் கொச்சைப்படுத்தியது தான் பா.ஜ.க! காஷ்மீரில் கோயிலுக்குள்ளேயே குழந்தை ஆசிபாவை சீரழித்து கொன்றுவிட்டு அந்த குற்றவாளிக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற கேடுகெட்ட கொடியவர்கள் இருக்கும் கட்சிதான் பா.ஜ.க.!

நாட்டுக்கு பெருமைதேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளி உலகத்திற்குச் சொல்லி, நியாயம் கேட்டபோதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியதுதான் பா.ஜ.க. இதுதான் ‘நாரி சக்தி’ என்ற முகமூடிக்குப் பின்னால் இருக்கும் உண்மை முகம்!

ஆனால், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் ஓதுவார்கள் ஆகியிருக்கிறார்கள். அர்ச்சகர்கள் ஆகியிருக்கிறார்கள். அதற்கு ஒரு படி மேல் போய், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயிலான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்களின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் அவர்களை நியமித்திருக்கிறோம். இப்படி முற்போக்குச் சிந்தனைகளோடு முன்னேறிக்கொண்டு இருக்கும் திராவிட மாடலைப் பார்த்தால் அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.

பிரதமர் ஆனதும் மாநிலங்களை சுத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு, மறைமுகமாக மிகப்பெரிய சதித் திட்டம் தீட்டியவர்தான் மோடி! இதை இந்தத் தனிப்பட்ட ஸ்டாலின் சொல்லவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் சொல்லவில்லை. மோடி அரசில் நிதி ஆயோக் தலைமை அதிகாரியாக இருக்கும் B.V.R. சுப்பிரமணியமே சில மாதங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தினாரே! மோடி பிரதமர் ஆனதும், மாநிலங்களுக்குப் போகும் நிதியை எப்படி குறைக்கலாம், அதை ஒன்றிய அரசு எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று, மோடி சதித்திட்டம் தீட்டியதாக அவர் சொல்லியிருக்கிறார். இதுதான் மாநிலங்கள் மேல் மோடிக்கு இருக்கும் போலி பாசம்!

அடுத்து ஒன்று சொன்னார்! ’டெல்லியில் இருக்கின்றவர்கள், மாநிலங்களை ஆளக்கூடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு எல்லா அதிகாரங்களையும் டெல்லியில் ஒன்றிய அரசிடம் குவித்து, மாநில அரசுகளை நகராட்சிகளாக மாற்ற முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். வரி விதிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடம் இல்லை!

இதையெல்லாம் விட மோசமான செயல், அதிகாரிகளை நியமிக்க, டிரான்ஸ்பர் செய்யக் கூட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். அதைத்தான் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகச் செய்தார். அரசு உயரதிகாரிகள் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதும், அதை எதிர்த்து, “டெல்லி சர்வீசஸ் பில்” கொண்டு வந்தார். மாநில அரசின் முக்கிய அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநர் என்ற நியமனப் பதவியில் இருக்கும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.

அதுமட்டுமா! பிரதமர் ஆவதற்கு முன்பு, “மாநிலங்களைப் பழிவாங்க மாட்டேன்”என்று சொன்னார் மோடி. ஆனால், நாட்டில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட்டணி முயற்சி எடுப்பார். முடியவில்லை என்றால், அந்தக் கட்சிகளை உடைக்கப் பார்ப்பார். அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவார். தன்னுடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பணியாத முதலமைச்சர்கள் மேல், சகட்டுமேனிக்கு ஊழல் குற்றச்சாட்டு வைப்பார். CBI, IT, ED போன்ற அமைப்புகளை வைத்து, தொல்லை செய்வார். அப்போதும் அவர்கள் உறுதியாக நின்றால், அவர்களைக் கைது செய்து பழிவாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்.

மோடியின் ஊழலுக்கு பணிந்துவிட்டால், உடனே, “மேட் இன் பி.ஜே.பி.” வாஷிங் மெஷினை எடுத்து வெளுத்து சுத்தமாக்கி, உலக யோக்கியர் என்று பட்டம் கொடுப்பார். இந்த லட்சணத்தில், மாநிலங்கள் மேல் அக்கறை இருப்பது போன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்!

இதே காஞ்சிபுரமும், சென்னையும் கடந்த டிசம்பரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது, அதற்கு ஒரு ரூபாயாவது ஒன்றிய அரசு நிவாரணமாகத் தந்ததா? நானே நேரில் சென்று, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். “இதோ தருகிறேன்”என்று சொன்னார். தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாம், டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்கள்! அவரும், “இதோ தருகிறேன்”என்று சொன்னார். ஆனால், இன்று வரை நிதியைத் தரவில்லை! மாநில முதலமைச்சரான என்னிடமே, பொய் சொன்னவர்தான் பிரதமர் மோடி. இப்போது நாங்கள் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறோம். இனியும் மாநில உரிமைகள் பற்றியோ, கூட்டுறவுக் கூட்டாட்சி பற்றியோ, பிரதமர் மோடி பேசலாமா? அவருக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கிறதா?

நாங்கள் மட்டும் இல்லை, வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் வாங்க அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றப் படி ஏறி இருக்கிறது. வறட்சி நிவாரணம் கேட்டு கர்நாடகம் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாநிலத்தையும் நீதிக்காகவும் – நிதிக்காகவும் நீதிமன்றப் படி ஏற வைத்தவர்தான் பிரதமர் மோடி!

அதனால்தான் சொன்னேன்! மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! பிறகு மக்கள் எப்படி நம்புவார்கள்? இப்போது புதிதாகப் பேட்டி என்ற பெயரில் ரீல் சுற்றிக்கொண்டு இருக்கிறார். நேற்று கொடுத்த ஒரு பேட்டியில் பிரதமர் மோடி சொல்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுகிறதாம். இதைக் கேட்டுச் சிரிப்பதா! இல்லை, பிரதமரின் பகல்கனவை நினைத்து அவர் மேல் பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. பிரதமர் அவர்களே! இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வளரவே முடியாது.

நாடு முழுவதும் பா.ஜ.க. ஜெயித்த 2014, 2019 தேர்தலிலே பா.ஜ.க.வை ஓரங்கட்டிய தமிழ்நாட்டு மக்கள், நாடு முழுவதும் நீங்கள் தோற்பது உறுதியாகி இருக்கும் இந்தத் தேர்தலில் உங்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள்? பத்தாண்டுகளாக ஒன்றியத்தில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேச்சில், வாயில்தான் பாஜக வளர்கிறதே தவிர, களத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதனால்தான் கூட்டணிக்கு உங்கள் கட்சியில் ரவுடிகளையும் கலவரம் செய்யும் எக்ஸ்பெர்ட்-களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த லட்சணத்தில் பாஜக எப்படி வளரும்? நீங்கள்தான் எப்போதும் மக்களை ஏமாற்றுவீர்கள் என்று பார்த்தால், இப்போது உங்களையே யாரோ தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என ஏமாற்றுகிறார்கள்.

அடுத்து இன்னொரு பொய்யைச் சிரிக்காமல் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமத்தில் உத்தர பிரதேசம் சென்ற நம்முடைய மக்கள், அங்கு நடந்திருக்கும் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்களாம். அதற்கு யாரை அழைத்துச் சென்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், நாம் நாளிதழ்களில் படித்து ஆதங்கப்பட்டது… உ.பி முதலமைச்சர் யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், 60 குழந்தைகள் இறந்ததன. மனித வளக் குறியீடு, ஊட்டச்சத்து, சட்டம் – ஒழுங்கு, தனிநபர் வருமானம் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டின் இடம் என்ன? பா.ஜ.க. ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் உத்தரப்பிரதேசத்தின் நிலை என்ன? இதெல்லாம் எங்கள் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் உங்கள் மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.

பத்தாண்டுகளாக நாட்டை பாழ்படுத்திய நிலை இனியும் தொடரக் கூடாது. “வேண்டாம் மோடி”என்று ஒட்டுமொத்த நாடும் உரக்கச் சொல்வதற்கான நாள் நெருங்கிவிட்டது! இன்னும் ஒருமுறை இந்த நாடு ஏமாந்தால், இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும்! வரலாறுகள் திரித்து எழுதப்படும்! அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிற்போக்குக் கதைகள் புகுத்தப்படும்! மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படும்! மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்! சமூகநீதிக்கு சவக்குழி தோண்டப்படும்! புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல்சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் சட்டம் நாட்டை ஆளும்! இதையெல்லாம் தடுக்கும் வலிமையான ஆயுதம், மக்களான உங்களுடைய வாக்குகள்தான்! இன்றை விட்டுவிட்டு நாளை புலம்புவது நல்லவர்களுக்கு அழகல்ல! நாடு காக்க இன்றே தயாராகுங்கள்!

பா.ஜ.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு! அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு! எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள். “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜனநாயகமும் – சமத்துவமும் – சகோதரத்துவமும் வென்றது!” என்ற புதிய வரலாறு எழுத, திருபெரும்புதூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.செல்வம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கே.பி.முனுசாமி: “வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை..!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றிதான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.

நேரடி களத்தில் வருபவர்களை பற்றிதான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. மேலும், தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தையாகும்.

தமிழக மக்களிடத்திலேயே உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இந்த கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்: கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசு…!

நாம் அன்றாடம் படிக்கப்படும் செய்திகளில் இன்றைய தலைமுறை திருமணத்தை மீறிய உறவுகளால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி கொண்டுள்ளது. அந்த வகையில், திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட பெண் ஒருவர், தன் கணவரையே கொல்ல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வினோத சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச ஆக்ராவின் பாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மத்தியப் பிரதேசம் பிண்டிலைச் சேர்ந்த பெண்ணை, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி திருமணம் முடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் மோதல் தொடர்ந்துள்ளது. இதனால், கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தப் பெண், பெற்றோர் வீட்டிற்குச் சென்றதுடன், அங்கிருந்தபடியே விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

அதேநேரத்தில், கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவி, மீண்டும் வந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த கணவருக்கு, விவாகரத்து விவகாரம் மேலும் ஆத்திரத்தை ஊட்டியுள்ளது. ஆயினும், நேரில் சென்று மனைவியிடம் சமரசம் பேசி அவரை அழைத்து வரலாம் என்று எண்ணி மாமியார் ஊருக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அவருடைய மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணவர் கேட்க, மனைவியின் உறவினர்கள் அவரைத் தாக்க முன்வந்துள்ளனர். அதிலிருந்து தப்பித்துவந்த அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயம் அறிந்த மனைவி, உடனே தன்னுடைய வாட்ஸ்அப்பில், வினோதமான ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். ’என்னுடைய கணவரை கொல்பவருக்கு, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்” என அவர் ஸ்டேட்டஸ் வைத்திருந்து நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

சிவி சண்முகம் தடாலடி: போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி…!

2024 நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்கிராஜ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக இருக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை பாஜக உருவாக்கி வருகிறது. நாடு இன்று ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அண்ணாமலை இங்கே மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கிறார். ஆனால், மக்கள் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி வேண்டாம் மோடி என்கிறோம்.

போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி என்கிறோம். நீங்கள் ஆண்டதும் போதும்.. மக்கள் கஷ்டப்பட்டதும் போதும். இன்னொரு முறை மோடியும் பாஜகவும் வந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே யாராலும் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை.

யாராவது பாஜகவை எதிர்த்தால் அவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி நடவடிக்கைகள் பாய்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைப் போல அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்துச் செயல்பட்டாலே நடவடிக்கை என்கிறார்கள். பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன உத்தம காந்திகளா..? இன்று பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்குக் கூட வரவில்லை. நமது தயவால் நான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார்.

பாண்டிச்சேரி கடற்கரையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலப்படம் ..!

வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள பாண்டிச்சேரி தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கில கலாச்சாரங்களின் இணக்கமான கலவை, அழகிய கடற்கரைகளால் வரிசையாக உள்ளது. பாண்டிச்சேரியில் உங்கள் கனவு விடுமுறைக்கான அனைத்து கூறுகளும் உள்ளன. சூரியன் முத்தமிட்ட கடற்கரைகள், அமானுஷ்ய ஆசிரமங்கள், விரிவான அருங்காட்சியகங்கள், பட்டு குடும்ப பூங்காக்கள் மற்றும் புதுப்பாணியான கிளப்புகள் சுற்றுலாப் பயணிகளை மயக்கும் வில்லாக்களைக் கொண்ட பழமையான பிரெஞ்சு காலனியாகும்.

பாண்டிச்சேரியில் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகள் அதிகம் குவியும் சுற்றுலா தலமாகும். இங்கு கடற்கரை பகுதி நிறைய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி சாப்பிடுகின்றனர். அப்படி விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசு துறை சார்ந்த அலுவலர்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். ‘களத்தில் முதல்வர்’ திட்டத்தின் அடுத்தகட்டமான, மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்களை குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .’உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்அகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்லம், வடலூர் அருகே கருங்குழி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு..!

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இலங்கையில் விவசாயம் சார்ந்த தொழில்கள், காபி மற்றும் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களை ஆங்கிலேயே அரசு இலங்கைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் ஏராளமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டனர் என்பது நாடறிந்த விஷயமாகும்.

இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற பிறகு குடியுரிமை சிக்கல் எழுந்ததால் இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கானோரை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்ட நிலையில் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்களால் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததனை நினைவு கூரும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் விழா நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இலங்கையில் மலையக தமிழர்களின் 200-வது ஆண்டை குறிக்கும் வகையில் மத்திய அரசு இன்று தபால் தலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவாகரத்துக்கு வந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி … 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்..!

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 29 வயது பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருமாரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்ற அந்த பெண் தனியாக வசித்துவந்ததுடன் விவாகரத்து கேட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்பா கார்டன் தெரு பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ருத்ரமூர்த்தி என்பவர் மூலம் வழக்கை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கறிஞர் ருத்ரமூர்த்தியுடன் பழக்கம் அதிகரித்து அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார். ருத்ரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாததால் அந்த பெண்ணுடன் வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அவர்களுடன் குழந்தைகளும் வசித்ததாக தெரிகிறது. கடந்த 24-ம்தேதி பெண், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த பெண்ணின் ஒன்பது வயது மகளுக்கு ருத்ரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கேட்டபோது ருத்ரமூர்த்தி பதில் ஏதும் கூறாமல் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று குழந்தையின் உடம்பில் குறிப்பிட்ட இடங்களில் வலி அதிகமாக இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘’குழந்தைக்கு யாரோ பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து உள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்று காலை ருத்ரமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்…!ராஜேஸ்வரி பிரியா கடும் சாடல்!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் நேற்று கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக்ஜாம் புயலால் பெருமழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.

நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியயும் இல்லை நிலைமை இன்னும் மாறவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடியாதல் சென்னையின் இந்த அவல நிலைக்கு காரணம் என நடுநிலையானவர்களும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி திமுகவையும் வறுத்தெடுத்து கொண்டுள்ளனர். இந்நிலையில்,அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, ”ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளது (அனுமதி வழங்க லஞ்சம் போதும்) என தனது குற்றசாட்டை முன்வைத்துயுள்ளார்.

என்ன கொடும சார்…!? விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர்..

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதோபோல விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கிராமசபை கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன், கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை எட்டி உதைத்தார். கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.