ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான 50 காவலர்களுக்கு மா.சுப்பிரமணியன் பாராட்டுக்கள்

கடந்த 31 நாட்களாக 6 முக்கிய மருத்துவமனைகளை சார்ந்த 3000 மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இடையறாது இப்பணியை செய்யும் முன்னாள் காவல்துறையின் ஆணையர் .ஏ.கே.விஸ்வநாதன் தலைமையிலான 50 களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

ராமதீர்த்தகுளத்தில் நீர் நிரப்பும் பணியை அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்


திருச்சி மாநகராட்சி பகுதியில் திருவானைக்காவல் நிர்வாகத்திற்கு சொந்தமான 42350 கனமீட்டர் கொள்ளளவுள்ள ராமதீர்த்தகுளம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் போது மலட்டாறு வாய்க்கால் மூலம் இந்த தெப்பக்குளத்திற்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.


காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையும்போது மாநகராட்சியின் குடிநீர்குழாய் மூலம் குளத்திற்கு நீர்நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த குழாய்கள் தற்போது சீரமைக்கப்பட்டு குளத்திற்கு நீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் பாஸ்டியர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் // மத்திய அரசு மூலப்பொருட்கள் கொடுத்தால் மாதத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும்..!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையால் நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் கோவிட் -19 பாதிப்பு குறைந்து வருகிறது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது.

கோவிட் -19 னால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தனிவார்டு தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை நான் தொடங்கி வைத்து உள்ளேன். இங்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் சிகிச்சை அளிக்கும் வகையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அதில் யாரும் பங்கேற்காத நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1907-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் முதலில் வெறிநாய் கடிக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தி.மு.க. நிர்வாகிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தபோது, இந்த நிறுவனத்தை மேம்படுத்த ரூ.137 கோடி நிதிபெற்று கொடுத்தனர்.

அந்த பணிகள் 2019-ம் ஆண்டே முடிவுற்று அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க தயார் நிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தில் நானும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆய்வு செய்தோம். கோவிட் -19 தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை மத்திய அரசு கொடுத்தால் அங்கு மாதம் ஒன்றுக்கு 1 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். இதற்கு மத்திய அரசு உரிய அனுமதி தர வேண்டும் என தெரிவித்தார்.

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் சார்பில் உணவு வழங்கல்

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கோவிட் -19 யை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் சாலையோரத்தில் வாழ்ந்து வரும் ஆதரவற்றோர் உணவு கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன்பு தன்னார்வலர்கள் சார்பில் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.


இதனை வாங்குவதற்கு ஏராளமானோர் திரண்டதால் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்தவாறு வரிசையில் நின்று ஆதரவற்றோர் உணவினை வாங்கிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து சாய்பாபா காலனி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் சிவானந்தா காலனி போன்ற பல இடங்களில் தன்னார்வலர்கள் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடம் அதிமுக சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி வழங்கல்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடம் அதிமுக சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை முன்னாள் அமைச்சர் sp.வேலுமணி தலைமையில் நேற்று வழங்கப்பட்டது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தமிழக முதலவர் ஆலோசனை


நம் மாநிலத்திலேயே கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாரத்பியோடெக் நிறுவனத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கொரோனா தடுப்பூசி மையம் முன்பு பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் சுழற்சி முறையில் முகாம் அமைத்து மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது சுழற்சி முறையில் 20 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடுவது குறித்த முறையான தகவல் இல்லாததால் வழக்கம் போல், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போட நேற்று காலை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தடுப்பூசி போடும் மையத்தின் முன்பு நேற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசிகள் போடப்படாது என்று மாநகராட்சி ஊழியர்கள் கூறியதால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் திடீரென்று ஈரோடு-சத்தி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவிட் -19 நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க வாத்தி கம்மிங் பாடலுக்கு நோயாளிகளுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம்

கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரி வளாகத்தில் கோவிட் -19 சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு கோவிட் -19 நோயாளிகளுடன் மருத்துவர்கள் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த மையத்தில் கோவிட் -19 சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவ்வபோது திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பபடுகின்றன. மேலும் பல திரைப்படப் பாடல்களுக்கு மையத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர் தொற்று ஏற்பட்டவர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை அமைச்சர் கே.என் . நேரு பார்வையிட்டு ஆய்வு

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை நவீன மயமாக ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.


இதன் கட்டிடப்பணிகளை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நேற்று அமைச்சர் கே.என் . நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், உணவுத்துறை அமைச்சர் அர. சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ.,மருத்துவமனை ஆர்.எம்.ஓ., கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம்

கோயம்புத்தூர் அரசு மற்றும் இ.எஸ்.ஐ.,மருத்துவமனைகளில், கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வில், அரசு மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ., பணியிடம் நீண்ட காலமாக காலியாக இருப்பது தெரியவந்தது. கோவிட் -19 நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்று வரும் இந்த சூழலில், மருத்துவ பணிகளை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்தார்.


இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் இருப்பிட மருத்துவராக பணியாற்றி வந்த குழந்தைவேலுவை, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவராக நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை தொடர்ந்து குழந்தைவேலு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.