விதியை மீறி செயல்பட்ட தனியார் நூற்பாலைக்கு சீல்

தமிழகத்தில் கோவிட் -19 பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரை அடுத்த சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி நடுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை வைத்து இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோயம்புத்தூர் தொழிலாளர் நலத்துறை அதிகாரி தங்கதுரை, சூலூர் தாசில்தார் சகுந்தலாமணி, வருவாய் ஆய்வாளர் சிவபாலன், காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படுவதற்கு பதிலாக ஏராளமான தொழிலாளர்களை வைத்து இயக்கப்பட்டது தெரியவந்தது. எனவே கோவிட் -19 விதிமுறைகளை மீறி செயல்பட்ட தால் அந்த நூற்பாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தனியார் தொழிற்சாலைகளில் அரசு அறிவித்து உள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறையை மீறி செயல்பாட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கோவிட் -19 அல்லாத பிற நோய்களுக்கு பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை

தமிழகம் முழுவதும் கோவிட் -19 குறைந்து வரும் நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கோவிட் -19 பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், பிற உடல்நலபொதுப் பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.


இந்நிலையில் இந்த குறைபாட்டை தவிர்க்க, கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, டெலி மெடிசன் மூலம் சிகிச்சை பெற புதிய சிறப்பு செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியின் பயன்பாட்டை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது நகர்நல அதிகாரி ராஜா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலியை செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று சிபிஇசிஒஆர்பி விஎம்இடி (CBECORP Vmed) என்ற டைப் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் http://qrgo.page.link/sby6R என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை பயன் படுத்தி 24 மணி நேரமும் வீடியோ கால் மூலம் மருத்துவர்களிடம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார்.

கொலை மிரட்டல் மற்றும் அநாகரிக செயல்பாடுகளுக்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம்: சி.வி.சண்முகம் காவல் நிலையத்தில் புகார்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், நான் கடந்த 7ம் தேதி அரசியல் ரீதியாக சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகம் வாயிலாக பேட்டி அளித்தேன்.

அதற்கு சசிகலா நேரடியாக பதில் அளிக்காமல் தன் அடியாட்களை வைத்து கைபேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் பேசி பதிவு செய்து வருகிறார்கள். மேலும் கைபேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.இன்றுவரை 500 பேருக்கு மேல் சமூக ஊடங்களில் என்னைப்பற்றி அநாகரிகமாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து என்னுடைய கைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். சசிகலாவை பற்றி பேசினால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்கள். இந்த கொலை மிரட்டல் மற்றும் அநாகரிக செயல்பாடுகளுக்கு சசிகலாவின் தூண்டுதல்தான் காரணம். எனவே கொலை மிரட்டல், ஆபாச பேச்சுக்களை பதிவு செய்ய காரணமான சசிகலா மற்றும் என்னுடைய கைபேசிக்கு போன் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

எல்.முருகன்: முன்களப்பணியாளர்களுக்கு 1 லட்சம் முககவசம் வழங்கும் திட்டம்


சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில், விவசாய அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்காக 1 லட்சம் முககவசம் வழங்கும் திட்டத்தை, மாநிலத்தலைவர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமை தாங்கினார்.

கோவில் நிலங்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

தமிழக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் 36 ஆயிரத்து 861 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பல ஏக்கர் நிலங்கள் தனியார் வசம் உள்ளன. இதற்கு பலர் வாடகை மற்றும் குத்தகை தொகையை கோவில்களுக்கு செலுத்தினாலும் சிலர் வாடகை தராமல் இருப்பதுடன், கோவில் நிலங்களை தங்கள் பெயர்களுக்கும் மாற்றிக்கொள்வது தெரியவந்து உள்ளது.

இதனால் கோவில்களுக்கு வரவேண்டிய வருமானம் முறையாக வராததால் கோவில்கள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்நிலையில், கோவில்களுக்கு நிலங்களை வழங்கியவர்களின் விருப்பத்திற்கு மாறாக அந்த நிலங்களை விற்பனை செய்யக்கூடாது. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை 6 வாரங்களில் தயாரித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். அத்துடன் குத்தகை, வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். தற்போது முழுவீச்சில் இந்தப்பணி நடந்து வருகிறது.

அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 861 கோவில்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பான ஆவணங்கள் நேற்று முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. எந்த கோவிலுக்கு சொந்தமான நில விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

கே.எஸ்.அழகிரி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு போராட்டம்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 7 ஆண்டு பாஜ ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 459 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, ரூ.20 லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வருவாய் பெருக்கத்தின் காரணமாக மக்கள் மீது கடுமையான சுமை ஏற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, 2014 ல் 410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களிடம் கொள்ளையடிப்பதை எதிர்த்தும், எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

அதையொட்டி தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் துறைகளின் தலைவர் ஆகியோர் அவசியம் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

ஐ.பெரியசாமி: கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை


கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி என்பவர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 3 முறை தாம் கருக்கலைப்பு செய்ததாகவும் இதுதொடர்பாக தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அடையாறு காவல்துறையினர் மணிகண்டனுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வரை அவரை கைது செய்ய கூடாது என்று ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் சார்பில், 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றி பின்னர் அரசியலுக்கு வந்ததாகவும், இந்த குற்றச்சாட்டை பொறுத்தவரை அவர் திருமணமானவர் என்று தெரிந்தே நடிகை சாந்தினி தன்னுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருவே ஏற்படாத போது எப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை பொறுத்தவரை தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்நிலையில் நடிகை சாந்தினி தரப்பில் வழக்கறிஞர் திருமணம் செய்து கொள்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால் உறவுக்கு அளிக்க ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கை பொறுத்தவரை ஒரு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் பயணமாக கோயம்புத்தூர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்


கொரோனா தடுப்பு மற்றும் கட்சி சார்ந்த பணிகளுக்காக மூன்று நாள் பயணமாக கோயம்புத்தூர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார். உதயநிதி ஸ்டாலின் முதல் பணியாக வால்பாறை செல்கிறார் .

உரிக்க உரிக்க காணாமல் போகும் அரசியல் வெங்கயாமாக மாறியுள்ள கிருஷ்ணசாமி எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு சொல்லி மிரட்டுவது கோமாளித்தனமானது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி 2,50,053 வாக்காளர்கள் உள்ள தொகுதியில் வெறும் 6544 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார். இது மக்களிடத்தில் குறிப்பாக தேவந்திர சமுக மக்களிடத்தில் கிருஷ்ணசாமி செல்வாக்கு இழந்துவிட்டார் என்பதை தெளிவு படுத்துகிறது.


அரசியலில் மக்கள் செல்வாக்கு இல்லாதவராகவும் உரிக்க உரிக்க காணாமல் போகும் அரசியல் வெங்கயாமாக மாறியுள்ள கிருஷ்ணசாமி எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு சொல்லி மிரட்டுவது கோமாளித்தனமானது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி லட்சுமணன் தெரிவித்தார்.