வேலூர் மாவட்டம் நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் காவல் துணை ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். காவல்துறையினரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அங்கிருந்த சாராய அடுப்பு, சாராய ஊறல்களை அழித்த காவல்துறையினர் பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சாராய வியாபாரிகள் வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.
பூட்டியிருந்த சில வீடுகளின் பூட்டு மற்றும் பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு, ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு, அத்துடன் பீரோக்களை உடைத்து எடுக்கப்பட்ட பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.