இனி பெண் காவல்துறையினர், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிக்கு சாலைகளில் கால்கடுக்க நின்று அவதிப்பட வேண்டியதில்லை.

முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, சாலைகளில் 50 அடிக்கு ஒருவர் வீதம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதுபோன்ற பாதுகாப்பு பணியில் பெண் காவல்துறையும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவல்துறையினர் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும். அது போன்ற சமயங்களில் இயற்கை உபாதையால் பெண் காவல்துறையினர் அவதிப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில் இது போன்ற இன்னல்களில் இருந்து விடுவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணையோடு பெண் காவல்துறையினருக்கு உதவி புரிந்துள்ளார். நான் செல்லும் சாலைகளில் பெண் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம், என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவுறுத்தல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆட்சியர் இன்று திடீர் மாற்றம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்தவர் ராஜாமணி. இவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு, பதிலாக புதிய ஆட்சியராக எஸ்,நாகராஜன் நியமிக்கபட்டு பொறுப்பேற்றார். இவர் தற்போது நில நிர்வாக துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார் . இவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபட்டுள்ளார்.

அதிமுக இணை செயலாளர் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சேலம், ஓமலூர் தொகுதியில் ஓமலூர் பேரூர் அதிமுக இணை செயலாளர் தலைமையில் 25க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அதிமுக உறுப்பினர் அட்டை உடன்‌, கழக இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.‌

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்குகிறது

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்து. அ.தி.மு.க. சார்பில் 66 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பலத்த போட்டி நிலவிய நிலையில், கூட்டம் முடிவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட தொடங்கினர். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நீடிப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், சசிகலா அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வரும் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 32 கிரவுண்டு நிலம் ஒப்படைப்பு

தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக அந்தந்த கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உத்தரவின் பேரில், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரத்தை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 141 கிரவுண்டு நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இவற்றில் கடந்த 2010-ம் ஆண்டு 12.5 கிரவுண்டு நிலம் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலம் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவுற்ற பின் கோவில் வசம் ஒப்படைக்க கோவில் செயல் அலுவலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல் கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கி்ல் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில் பள்ளிக்கூடத்தை தங்களால் தொடர்ந்து நடத்த இயலாது என கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவில் செயல் அலுவர் தியாகராஜனிடம், கலவலக் கண்ணன் செட்டி சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் பல கோடி மதிப்புள்ள 32 கிரவுண்டு இடம் மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கான ஆவணங்களை கோவில் வசம் ஒப்படைத்தார்.

குளித்தலை தொகுதி பொதுமக்களுக்கு கோவிட் -19 நிவாரண பணிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


முத்தமிழறிஞரின் முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றியை உறுதி செய்த குளித்தலை தொகுதி பொதுமக்களுக்கு ஊரடங்கு காலத்தில் உதவிடும் வகையில் கோவிட் -19 நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி பைகள் வழங்கும் நிகழ்வை மணத்தட்டையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாற்று திறனாளிகளுக்கு அமைச்சர் கே. என். நேரு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்


அமைச்சர் கே. என். நேரு கோவிட் -19 காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து வருகின்றார். அந்த வகையில், மாற்று திறனாளிகள் தன்னார்வ நல சங்கத்தை சார்ந்த 500 பேருக்கு கோவிட் -19 பேரிடர் கால நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

அ.தி.மு.க சார்பில் வீடு வீடாக சென்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கல்


கோயம்புத்தூர் முன்னாள் நகரமைப்பு குழு தலைவரும், அ.தி.மு.க 96வது டிவிசன் செயலாளருமான செந்தில்குமார் சார்பில் கோவிட் -19 குறிச்சி பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் மிக மிக பின்தங்கிய 100 குடும்பங்களுக்கு தலா 10கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நான்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினார்.


மேலும் கோவிட் -19 சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கையுறைகள், ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கருவி உட்பட கொரோனா நோய் தடுப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

டிஜிபி திரிபாதி உத்தரவு: முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு

டிஜிபி திரிபாதி உத்தரவு: முதலமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு