கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் அதிகாரிகளுடன் ஆசிரியர்கள் வாக்குவாதம்

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை உள்பட 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வந்த ஆசிரியர்கள் நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்கு காத்திருந்தனர்.

அப்போது ஆசிரியர்கள் இல்லாத நபர்களை வரிசையில் நிற்க வைக்காமல், உள்ளே அனுமதித்து தடுப்பூசி போட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூனியர் ஃபிஸ்ட் பால் வீராங்கனைக்கு நிதியுதவி

நாமக்கல் குமாரபாளையம் தபஸ்வினி இந்திய ஃபிஸ்ட் பால் ஜூனியர் அணி வீராங்கனை ஆஸ்த்ரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க நிதியுதவி செய்யுமாறு உதயநிதி ஸ்டாலின் கோயம்புத்தூர் பயணத்தின்போது சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். தபஸ்வினியின் கோரிக்கை ஏற்று நேற்று உதயநிதி ஸ்டாலின் ரூ.1.70 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

கோவிட் -19 சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

சென்னை, பெசண்ட் நகர், திருவான்மியூர் – குப்பம், திருவீதி அம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில், கோவிட் -19 சிறப்பு நிவாரண இரண்டாம் தவணை உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.


இந்தநிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர் திரு.துரைகபிலன், வட்டச் செயலாளர்கள், திரு.ராஜு, திரு.ஜெய்குமார், திரு.ராஜாராமன், திரு.கணேஷ்குமார், கழக நிர்வாகிகள், முன்னணியினர் கலந்துகொண்டனர்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் சைதாபேட்டை அன்னபூரணி அம்மாள் பள்ளி வளாகத்தில் “தடுப்பூசி முகாம்”

உலகையே இன்று கொரோனா ஆட்டிப்படைத்து கொண்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான் என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட உண்மை. அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.

அதன்வரிசையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் சைதாபேட்டையிலுள்ள அன்னபூரணி அம்மாள் பள்ளி வளாகத்தில் ன் தடுப்பூசி முகாம்” அமைச்சர் ம. சுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலான தடுப்பூசி மையம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பாக அனைத்து ஒன்றிய பகுதி பேரூர் கழக நிர்வாகிகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலான தடுப்பூசி மையங்களை அமைத்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் வழங்கப்பட்டது.

கே.எஸ்.அழகிரி: திமுக நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கவர்னர் உரை மூலம், தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் கூறினார்.


வரியை எதில் குறைப்பது, எதில் வரியை கூட்டுவது, எப்படி மாநில அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்பதற்காக தான் ரகுராம் ராஜன் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மேதைகளை இந்த ஆய்வு குழுவில் சேர்த்துள்ளார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு மூச்சுவிட நேரம் வழங்க வேண்டும். திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் என தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று…இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். முதலில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். அப்போது, “காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி” என்றார்.

மேலும் அவரது உரையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும், உழவர் சந்தைக்கு புத்துயிர், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றன. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான சட்டசபை கூட்டம் தொடங்கியது.

நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அறிவித்தார் சபாநாயர் அப்பாவு! சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சூதாடியவர்களிடம் வசூல் வேட்டை சிறப்பு எஸ்.ஐ சஸ்பெண்ட்

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள மெட்டுவாவி பகுதியில் கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நெகமம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற சிறப்பு துணை ஆய்வாளர்., ஏசு பாலன் சூதாட்டம் நடப்பதை உறுதி செய்தார். தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க அவர்களிடம், ரூ.7,000 பணம் பெற்றுள்ளார்.


இது குறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவையடுத்து, நெகமம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் விசாரித்தார். இதில், ஏசு பாலன் பணம் பெற்றது உறுதியானது. இதையடுத்து, ரூரல் எஸ்.பி., செல்வநாகரத்தினம், எஸ்.எஸ்.ஐ., ஏசுபாலனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு, பொள்ளாச்சி துணை ஆட்சியர் மகாராஜ் வழியாக ஒரு மனு அனுப்பினர். அதில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண முறைகேடு நடப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப் பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2019-20-ம் கல்வி ஆண்டிற்கு குறைந்தபட்சம் எல்.கே.ஜி.க்கு ரூ.11,615-ம், அதிகபட்சமாக பிளஸ்-2-க்கு ரூ.25,850 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த கட்டண பட்டியல் பள்ளிகளில் வைக்கப்படுவது இல்லை. கொரோனா காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 75 சதவீத கட்டணத்தை 2 தவணையாக கட்டலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை யாரும் கடைபிடிப்பது இல்லை. எனவே அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டும் மாணவர்களிடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இணையவழி வணிகம் உள்பட மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி