கரூர் நகராட்சி மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பொது மக்களின் குறைகள் மனு பெறும் நிகழ்ச்சி

கரூர் நகராட்சி (இனாம் கரூர்) பெரிய குளத்துப்பாளையம் 2வது வார்டு பகுதியில் மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பொது மக்களின் குறைகள் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அம்மனு மீது உடனடி தீர்வு காணப்படும் என்ற உறுதியை வழங்கினார்.

சென்னை வேளச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்பு

சென்னை வேளச்சேரி 179 வார்டு VGP செல்வாநகரில் இன்று புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆகியோர் இயக்கி வைத்தனர்.

இந்தநிகழ்ச்சியில் அரிமா.சு.சேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பணியாளர்களின் ஒருநாள் சம்பளம் கொரோனா நிவாரண நிதி

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பணியாளர்களின் ஒருநாள் சம்பளம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலை வழங்கினர்.

மக்கள் நீதி மய்ய புதிய நிர்வாகிகள் நியமனம்…!

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கடசியில் இருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் கூறி இருந்தார்.

இந்நிலையில், இன்று நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.

புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.

புதிய நியமனங்கள்

1. பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்

2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்

3. ஏ.ஜி.மவுரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு

4. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

5. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

6. சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு

7. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்

8. ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்

9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்”.என கமல்ஹாசன் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசும் போது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.  அரசியலை விளையாட்டாக எடுத்து கொள்பவர்கள் இந்த நாட்டில் உள்ளனர்.  தற்போதைய சூழ்நிலையில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

விளையாட்டு போட்டிகளில் அணி ஒற்றுமை மிகவும் முக்கியமானது வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால் வெற்றி சாத்தியம். வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என கூறினார்.

சைதை ஏ.சந்தோஷ் திமுகவில் இணைந்தார்

சைதாப்பேட்டை பகுதி அஇஅதிமுக, பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சைதை ஏ.சந்தோஷ் அவர்கள் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதிக்கழக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.

ம.பொ.சிவஞானம் அவர்களின் 116 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை

சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பொன்னுசாமி சிவஞானம் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. 1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கினார்.

ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார். தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர்.

தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்’ என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார்.

சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு என தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் தமிழர் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.

சிலம்புச் செல்வர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் 116 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் ம. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.