அதிக கட்டணம் வசூலித்த எதிரொலி கொரோனா ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர்.

அப்போது பொள்ளாச்சியில் ஊத்துக்காடு ரோடு, பாலகோபாலபுரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது தெரியவந்தது. மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.

ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1900 வரை கட்டணம் வசூலித்து உள்ளனர். எனவே 2 ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

எங்கே செல்கிறது தமிழகம்: பெற்ற மகளை தந்தையே சீரழித்ததால் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி..!

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காவல்துறை விசாரணையில் அம்பலம் இதுகுறித்து அவர்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் அவரது தந்தை என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. காவல்துறையினர் தந்தையை கைது செய்தனர்.

தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட இருளர் சமுதாய மக்கள்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தேளூர், குடிசல், மண்ணுழி ஆகிய ஊர்களில் கடந்த 2006-07-ம் ஆண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, ஒரத்தூர் இருளரின மக்கள், விவசாயம் செய்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளர் சமுதாய மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு பட்டா ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி, இருளர் சமுதாயத்தினருக்கு பட்டா வழங்க முன்வந்தார். இதையடுத்து அந்த இடத்தை அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை அனுபவித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க, 2014-ம் ஆண்டு அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது இருளர் சமுதாயத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து எள், கடலை, உளுந்து, பருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள், இருளரின மக்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி, நில அளவையர், விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அனுசுயா தேவி, தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாயத்தினர் பட்டா மற்றும் கையில் விஷ பாட்டிலுடன் சென்று, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை உடனே கையகப்படுத்த அதிகாரிகளுக்கு KKSSR ராமசந்திரன் உத்தரவு

விரைவில் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ரெடி..!

ஆவின் நியமனங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் – தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்.

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ‘தி மயிலாப்பூர் கிளப்’ சீல்- ரூ.3 கோடி வாடகை பாக்கி கேட்டு நோட்டீஸ்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சொந்தமான 42 கிரவுண்ட் இடம், மயிலாப்பூர் லஸ் கார்னரில் ‘தி மயிலாப்பூர் கிளப்’ நடத்த 1903 ஜனவரி 1ம் தேதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் குத்தகை காலம் கடந்த 2000-ம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பிறகு, குத்தகைக்கு விட தடை விதிக்கப்பட்டது. எனவே, மயிலாப்பூர் கிளப் நிர்வாகத்திடம் கோயில் நிர்வாகம் சந்தை நிலவரம் அடிப்படையில் நிர்ணயித்து வாடகை வசூலித்து வந்தது.

2007ல் இந்த 42 கிரவுண்ட் நிலத்தில் 18 கிரவுண்ட் நிலத்தை கோயில் நிர்வாகம் கையகப்படுத்தி, அதை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அங்கு பார்க்கிங் மற்றும் நூலக கட்டப்பட்டது. இதனால் மீதம் இருந்த 24 கிரவுண்ட் நிலத்துக்கு கடந்த 2007 முதல் மாத வாடகைரூ.2.50 லட்சம் என நிர்ணயித்து ‘தி மயிலாப்பூர் கிளப்’ அறக்கட்டளை நிர்வாகத்துக்கு விடப்பட்டது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும்ரூ.50 ஆயிரம் கட்டணம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016ல் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாதம்ரூ.4.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பேரில் தான் ரூ.3.57 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பாக்கி தொகையை செலுத்த கோரி கோயில் நிர்வாகம் பலமுறை கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் சில லட்சங்களை மட்டும் கிளப் நிர்வாகம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் ரூ.3 கோடி பாக்கி தொகை தர வேண்டியிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் கோயில் நிர்வாகம் சார்பில் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கிளப்பில் இருந்து மதுபான பாரை எடுக்கவில்லை என்றால் கோயில் நிர்வாகம் சார்பில் சீல் வைக்குமாறு உத்தரவிட்டார். செயல்பட்டு வரும் மயிலாப்பூர் கிளப்பில், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த மதுபான பாருக்கு கோயில் நிர்வாகம் அதிரடியாக சீல் வைத்தது. மேலும் ரூ.3 கோடி வாடகை பாக்கியை செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வி.கே. சசிகலா: என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார். அதில் வி.கே. சசிகலா எம்ஜிஆரின் அரசியல் பயணத்திலும் நான் இருந்திருக்கிறேன். இது பலருக்கும் தெரியாது.

கட்சிக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும், என்னைக் கட்சியை விட்டு நீக்குவதும் சிறுபிள்ளைத்தனமானது. கட்சி தொடர்பாக நிறையக் கருத்துகளை என்னிடம் எம்ஜிஆர் கேட்பார். மேலும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எப்போதும் ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும். பிரிந்திருக்கக் கூடாது. அதிமுகவை கைப்பற்ற வேண்டியதில்லை அது நமது கட்சி எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசு கொரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் கவர்னர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்கள்.

இம்மையத்தில் ககொரோனா தொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும் இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார். இம்மையம், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்கு பன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல் இருந்து மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தென் இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாக இந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம் மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது எண்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1 தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு