செஞ்சிலுவை சங்க நிர்வாகிக்கு தேசிய விருது

செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் சிறப்பாக சேவையாற்றும் ஒருவருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஜனாதிபதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் செஞ்சிலுவை சங்கம் மூலம் சிறப்பாக சேவையாற்றியவர்களில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவிக்கும் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இணையதளம் மூலம் நடந்தது.

இதில் திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் இணை செயலாளர் சையது அபுதாகிருக்கு தேசிய அளவில் விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் விருது நேரில் வழங்கப்படாமல் திண்டுக்கல் சங்க அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சையது அபுதாகிருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் விசாகன் சையது அபுதாகிருக்கு விருதை வழங்கி பாராட்டினார்.

மாற்றுத்திறனாளியின் கோரிக்கை ஏற்று உடனடி பணி தொடங்கியது

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி தையல் கடை நடத்தி வருகிறார். நடக்க முடியாத மூர்த்தி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வரும் மண் சாலை தாழ்வான இடத்தில் இருந்து மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் மூலமாக அந்தப்பகுதியில் அவர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் மண் சாலையால் தனக்கு ஏற்படும் சிரமங்களை போக்கவும், இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காகவும் மண் சாலை உள்ள பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுக்கு தொடர்ந்து அனுப்பினார்.


இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கான டுவிட்டர் கணக்குக்கு இந்த கோரிக்கை குறித்த மனுவை அண்மையில் அனுப்பினார். இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவுப்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினார்கள். அதன் அடிப்படையில் அங்கே மண் சாலை இருந்த பகுதியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்ய பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று பள்ளியை தலைமை ஆசிரியை திறந்து பார்த்த போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் 6-ம் வகுப்பு பாட புத்தகங்கள் 140 திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வி.கே. சசிகலா: நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார். அதில் வி.கே. சசிகலா அ.தி.மு.க.வில் கட்சியில தொண்டர்கள் தேர்வு செய்பவரே தலைமைக்கு வரமுடியும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.

நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை. நம்ம கட்சி இப்படி சீரழியுறதை பாக்க முடியல. கண்டிப்பா வந்து கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். கட்சியை அம்மா போல நானும் வழிநடத்துவேன். இது ஒரு சத்திய சோதனை. தொண்டர்கள் துணையோட அதை வென்று காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

வி.கே. சசிகலா: தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன் _நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன்

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார்.

அதில் வி.கே. சசிகலா இந்த கட்சிக்கு இப்போ ஒற்றுமைதான் வேணும். தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன். அப்படி ஒரு நிலைமைதான் இப்போவும் ஏற்பட்டிருக்கு. இதுலயும் நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

பெரிய அட்டையில் ஊசி போன்ற வடிவத்தை உருவாக்கி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர் மருத்துவர் போல வேடமணிந்து கலந்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், மாணவ- மாணவிகளுக்கான கல்விக்கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து தற்போது மழை ஓய்ந்து சீசன் முடிந்தபோதும், மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு பணி நடந்தது.

தன்னார்வலர்கள் உதவியுடன் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களிலும், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய கோவில் பகுதிகளிலும் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 8 பேரும் சீர்காழியில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.