மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா நடத்திய வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கெஜலட்சுமி நகரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் இருந்த கடையை காலி செய்துவிட்டு, கடை மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றித் தரக்கோரி கட்டணமாக ரூ.118 கட்டி கடந்த 4.1.2021 அன்று மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை கடைமின் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து 3 முறை மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று புதிய மனுவுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் குடியாத்தம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.. அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் உள்ளன. தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மணல் குவாரிகள் இல்லை. இதனால் இதனை நம்பி உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் பசி, பட்டினியுடன் இருக்கிறோம்.

கட்டுமான தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மாடுகள் பட்டினியால் சாகும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தொழிலாளர்களான நாங்களும் சாகும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் கல்வி, பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பஞ்சாயத்தில் பாலாற்றில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

தனியார் உரம் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து

சேலம் மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்து வருவதால் அனைத்து விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்ய முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேளாண்மை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் உரக்கடைகளில் உரங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுக்க ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உரக்கட்டுப்பாடு விதி மீறல்களில் ஈடுபட்டதாக 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி பெண் காவலர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லியில் 21 வயதே ஆன சபியா என்னும் பெண் காவலர் மார்பகங்கள் அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தியாகதுருகம் பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தில் துணைத்தலைவருடன் வாக்குவாதம் செய்த கவுன்சிலர்கள்; நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அவசர கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகிக்க, தலைவர் ரெஜினா நாயகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டத்தை முடித்துக்கொள்ளலாமா? என்று தலைவர் கேட்க துணை தலைவர் யாகப்பன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் வேறு கட்சியில் இணைய உள்ளதாக தெரிகிறது. அப்படி இணைய முடிவு செய்தால் அவர்கள் தங்களின் தற்போதைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்றார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த நாற்காலியை பாலமுருகன் எடுத்து கீழே வீசினார்.

இதற்கிடையே அங்கு வந்த மற்ற கவுன்சிலர்கள், துணை தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சின்னமாயன் என்ற அறிவழகன் தலைமையில் கவுன்சிலர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குறித்து தகவலறிந்த நிலக்கோட்டை காவல்துறை விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

கருமலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே கருமலையில் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த கருமலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாஆலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதியும், அதைத்தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேர்பவனி, நவநாட்கள் மற்றும் கூட்டுபாடல் திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேர்பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்த இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

பெரியாருக்கு சிலை வைக்கக்கூடாது: அர்ஜூன் சம்பத் மனு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியாருக்கு திருச்சி சிறுகனூரில் சிலை வைக்க அனுமதி அளித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்த அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி, மக்களின் இந்து தெய்வ நம்பிக்கைகளைப் புண்படுத்தி பிரச்சாரம் செய்ததுடன், உருவ வழிபாட்டை எதிர்த்தவர் பெரியார். எனவே, அவருக்கு திருச்சி சிறுகனூரில் சிலை வைப்பதை இந்து மக்கள் கட்சி எதிர்க்கிறது. சிலை வைக்க அளித்த அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், புதிய 23 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்கச் சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்தச் சட்டப்பேரவைத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஏனைய நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக வழங்கப்படும்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், புதிய 23 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் 25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு அடைகாப்பகச் சேவை வழங்கும் புதிய திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

மேலும் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூ.50,000 வீதம் 100 நபர்களுக்கு மானியம் வழங்கப்படும். அதுமடடுமின்றி தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஏனைய நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 இருந்து 3,000 பெண்களுக்கு 2,000 இருந்து 5,000 என உயர்வு

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 30 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் நரிக்குறவர் மற்றும் சீரமரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

மேலும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இலவச பித்தளை தேய்ப்புப் பெட்டிகளின் எண்ணிக்கையினை 2,000-லிருந்து 3,000 ஆக உயர்த்தி 48 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மானவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் மற்றும் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் அளிக்கப்படும் போன்ற முக்கியமான தகவல்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளிட்டார்.