ஆண் துணையற்ற ஏழை மூதாட்டியின் நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவி கணவர் மண்ணை திருடி சாலை அமைத்தாரா?

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் ஏழை மூதாட்டி சியாமளம்மாள் தனது நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவி தங்கம்மாளின் கணவர் கோவிந்தசாமி ரூ.3 லட்சம் மதிப்புள்ள மண்ணை திருடியது மடடுமின்றி தனது நிலத்திலேயே சாலை அமைத்ததாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் தான் இது குறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கிடைத்த தகவலில் பொதட்டூர்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் ராக்கி குமாரி கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மண் எடுத்த இடத்தின் உரிமையாளர் யார் என்ற விவரத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க கேட்டு பள்ளிப்பட்டு தாசில்தாருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் அங்கிருந்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கு எந்த வித பதிலும் நேற்று வரை கிடைக்காததால் எந்தவித நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவை தொடர்புகொண்டு கேட்ட போது மண் இருந்த இடம் சாலை அமைத்த இடத்தின் உரிமையாளர் யார் என்று நில அளவை செய்து உடனடியாக பொதட்டூர்பேட்டை காவல் நிலைய துணை ஆய்வாளருக்கு பள்ளிப்பட்டு தாசில்தார் அறிக்கை அனுப்ப ஆவன செய்யப்படும் என தெரிவித்தார்.

மிரட்டி பணம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள திருச்சுழியூர் கிராமத்தை சேர்ந்த விஜயபிரபாகரன் என்ற இளைஞர் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். விஜயபிரபாகரன் சேலத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியில் வாகனங்களுக்கு ஆந்திரா செல்ல பர்மிட் வாங்கினார்.

பர்மிட் உடன் ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.500 என சோதனைச் சாவடி ஊழியர் ரூ.2500 லஞ்சமாக கேட்டார். அந்த பணத்தை ஊழியரிடம் கொடுக்கும்போது வீடியோவை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தமிழக எல்லையான கிறிஸ்டியான்பேட்டை செல்லும்போது காட்பாடி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் இவர்களை மடக்கி பணம் கேட்டு, நெல் அறுவடை எந்திர தொழிலாளர்களிடம் இடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

மேலும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோதனை சாவடியில் ஒரு வாகனத்துக்கு ரூ.500 கொடுக்கிறீர்கள். எனக்கு கொடுக்க கசக்கிறதா என கேட்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் வழக்குப் பதிவு செய்வேன் என மிரட்டுகிறார். இதனால் அவர்கள் பணத்தை கொடுக்கின்றனர். பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் ஆந்திராவிற்கு சென்று விட்டனர்.

இந்த இரண்டு வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெல் அறுவடை எந்திர தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் ஜானகிபுரத்தில் அமைந்துள்ள 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்கு காட்டாமல் கூடுதலாக மதுபான வகைகளை வாங்கி வந்து தனியார் குடோன்களில் பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் எழுந்த புகாரின்பேரில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நேற்று முன்தினம் அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை பறிமுதல் செய்து, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் உட்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

முத்துராமலிங்க தேவர் என அவரது 114 வது பிறந்த தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என்று சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார்.

மேலும் நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும், அதேநேரத்தில் எறும்பு கடிக்கும்போது கோபம் வராமல் வருடி கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முன்மொழிந்த இந்த முத்துமொழிகளை பின்பற்றி நடப்பதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் அதிரடி: அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு சீல்

அனுமதியின்றி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் முதியோர் காப்பகங்கள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்ட முதியோர் இல்லம் மற்றும் ஒத்தக்கடையில் புதிய நமது இல்லத்தில் ஆட்சியர் கவிதாராமு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மது இல்லம் அறக்கட்டளை மற்றும் புதிய நமது இல்லம் ஆகிய காப்பகங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து 2 காப்பகங்களுக்கும் ஆட்சியர் `சீல்’ வைக்க உத்தரவிட்டார். மேலும் அழியாநிலை முதியோர் காப்பகத்தில் தங்கி இருந்த 31 ஆண்கள், 37 பெண்கள் என 68 பேரும், ஒத்தக்டை புதிய நமது இல்லத்தில் தங்கி இருந்த 51 ஆண்கள், 8 பெண்கள் என 59 பேரும் என மொத்தம் 127 பேரையும் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி பழைய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கான தகுந்த சிகிச்சைகள் அளிக்க உத்தரவிட்டார்.

மேலும் கந்தர்வக்கோட்டை வட்டம், அரியானிப்பட்டியில் செயல்படுகிற ரெனிவல் பவுண்டேஷன் என்ற மனநலப் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்த காப்பகமும் உரிய அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டதால் `சீல்’ வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 105 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்தார்.

மனிதனை ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என முழங்கியவர் முத்துராமலிங்க தேவர்

முத்துராமலிங்க தேவர் என அவரது 114 வது பிறந்த தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்.

மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என்று சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

வியாபாரிகள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கேட்டு வியாபாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஊட்டியில் 5 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கோத்தகிரி, பந்தலூர் , குன்னூர், கூடலூரில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படாததால் வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் வியாபாரிகள் வாங்கிய பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதால் தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்களே உள்ள நிலையில் நேற்று இரவு பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவர் மற்றும் மருதுபாண்டி சிலைகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 53 வது குருபூஜை சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் நேற்றைய முதல் நாள் தொடங்கின.

இந்நிலையில், கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பகுளம் மருதுபாண்டியர் சிலை ஆகியவற்றுக்கு சற்றுமுன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போக்குவரத்து அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்: தற்காலிக ஊழியர் உள்பட 6 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கோழிப்போர்விளையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று மதியம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் துரை தலைமையில் காவல்துறை வந்தனர்.அவர்கள் அங்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆன்லைனில் புதிய லைசென்சு எடுக்க விண்ணப்பிக்கும் அலுவலகம், அதை சுற்றியுள்ள கடைகளிலும் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சு எடுப்பவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பிரிவில் சோதனை நடத்திய போது, அங்கு இருந்த தற்காலிக ஊழியரிடம் ரூ.3 ஆயிரத்து 200 இருந்தது.மேலும் அருகில் உள்ள ஆன்லைன் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக முத்திரைகள் மற்றும் ஆவணங்களும் இருந்தன. இது தொடர்பாக 5 புரோக்கர்கள் மற்றும் தற்காலிக ஊழியர் உள்பட 6 பேரை பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு திடீர் சோதனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற பணிகள் அலுவலகத்திற்கு வந்தவர்கள் விவரம் மற்றும் கணக்கில் வராத பணம் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தினர்.

மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றநிலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தது.