அருணாசலேஸ்வரர் கோவிலில் தற்காலிக பணியில் முறைகேடா..!?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த தாய், மகன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அவர்களை மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை கோபுரத் தெருவை சேர்ந்த ஆண்டாள் அம்மாள் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் கூறுகையில், 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் தற்காலிமாக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் எனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து 5 நாட்கள் விடுமுறையில் சென்றேன். பின்னர் வேலைக்கு வரும் போது என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையரை சந்திக்க சென்ற போது என்னை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் எனது தற்காலிக பணியில் முறைகேடாக வேறு ஒரு நபரை பணியில் அமர்த்தி உள்ளனர். எனவே நான் பார்த்து வந்த வேலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

வன அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் விநாயகன் என்ற காட்டுயானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் விநாயகனை தடுக்க கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு வருகின்றனர். ஆனாலும், விநாயகன் யானை ஊருக்குள் வந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், இதனால் விநாயகனை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில் விநாயகன் யானையை பிடிக்கக்கோரியும், அதற்கு நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரை கண்டித்தும் ஸ்ரீமதுரை ஊராட்சியை சேர்ந்த தேவசியா தலைமையில் பொதுமக்கள் கூடலூர் வன அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிற்கு பிடிவாரண்டு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் மகன் விவசாயி ராசப்பன். ராசப்பன் நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக அவர் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராசப்பன் நில பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டாவாக வழங்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பரமத்திவேலூர் தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்போதைய பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே நீண்ட காலமாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்ததால், இதுதொடர்பாக ராசப்பன் மீண்டும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் படி மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர், திருச்செங்கோடு உதவி ஆட்சியர் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு உதவி ஆட்சியர் இளவரசி மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

கொரோனா காலத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மூடி இருந்த சமயத்தில் அரசு தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாநில அரசு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆனால் 20 சதவீத போனஸ் வழங்க தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை , போனஸ் உயர்த்தி வழங்கப்படுவது குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் ஏமாற்றமடைந்த அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்து, பின்னர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் சீரமைக்காமல் காலம் கடத்தியதால் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மதுராம்பட்டு கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதிகாரிகள் சீரமைக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை வெங்கிக்கல் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வரை கண்டித்து கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கடைவீதி அருகே ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 8 ஆசிரியர்களை முதல்வர் திடீர் பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் முதல்வரை கண்டித்து கொட்டும் மழையிலும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறும்போது, எங்களை ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு குறைந்த சம்பளத்தில் மீண்டும் வேலையில் சேர கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை கைவிடாவிட்டால் குடும்பத்துடன் பள்ளி முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம்…! மீண்டும் எழும்…!

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் போக்குவரத்து பிரிவிற்கு 5 பணிமனை புதிய நிர்வாகிகள் நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நியமனம் சான்றிதழ்களை வழங்கினர்.

அப்போது, அ.தி.மு.க.விற்கு எப்போது எல்லாம் சோதனைகள் வருகின்றதோ அப்போது எல்லாம் இருந்தவர்கள் தான் இப்போதும் இருக்கின்றனர். திடீரென வந்தவர்கள் திடீரென போய் விட்டார்கள். அ.தி.மு.க. என்றும் சாகா வரம்பெற்ற இயக்கம். கழகத்திற்கு 1996-ம் ஆண்டு ஏற்படாத சோதனையா தற்போது ஏற்பட்டுள்ளது.

சோதனை என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல, சோதனைகள் வரும்போது தான் எறிகின்ற பந்து எப்படி துள்ளி எழுந்து வருமோ அதே போன்று அ.தி.மு.க. மீண்டும் எழும் என தெரிவித்துள்ளார்.

5 மாதங்களுக்கு முன்பு இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வெங்கடம்பேட்டை ஊராட்சி பிள்ளைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் குடும்பத்தில் கடந்த 5.8 .2021 அன்று அவருடைய பிள்ளைகள் 2-பேருக்கும் மனைவிக்கும் செவிலியர்கள் வீட்டிலேயே வந்து கோவிசில்டு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள். மீண்டும் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு 84- நாள் கழித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

ஆனால் குடும்பத்தில் உள்ள ஒரு மகள் கல்லூரிக்கும் மற்ற இருவர் கும்பகோணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர் நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமலேயே தடுப்பூசி போட்டதாக செல்போனுக்கு சர்டிபிகேட் வந்துள்ளது. அந்த சம்பவம் அடங்கும் முன்பே திருச்சி உறையூர் பெஸ்கி நகரை சேர்ந்த செல்வராஜ் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டார். அதன்பிறகு 4 நாட்களில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 15-ந் தேதி இறந்தார்.

இந்நிலையில் செல்வராஜ் பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில், செல்வராஜூக்கு நேற்று முன்தினம் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்தவரின் செல்போனுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேகோ பேக்டரியில் பார்மிக் ஆசிட், அசிட்டிக் ஆசிட் உள்ளிட்ட 1,500 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சேகோ பேக்டரியில் ஆலையில் ரசாயனம் கலந்து ஜவ்வரிசி தயாரிப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேகோ பேக்ட்ரியை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு இருந்த ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 9 ஆயிரம் கிலோ கிழங்குமாவு, 14 ஆயிரம் கிலோ கலப்பட ஜவ்வரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி ரசாயன பொருட்களான பாஸ்போரிக் ஆசிட் 210 கிலோ, ஹைட்ரஜன் பெராக்சைடு 300 கிலோ, அசிட்டிக் ஆசிட் 35 கிலோ, பார்மிக் ஆசிட் 105 கிலோ, பிளிச்சிங் பவுடர் 400 கிலோ உள்பட மொத்தம் 1,500 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோடி அய்யா விவசாயிகள் காதில் பூ சுற்றி விட்டார்…!

கடந்த 12- ஆம் தேதி திருச்சி-கரூர் பைபாஸ், மலர் சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 46 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 19-வது நாள் போராட்டத்தில் விவசாயிகள் காதில் பூவை சுற்றி பங்கேற்றனர்.

பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகாரமான விலை தருவதாக கூறி 1 கிலோ ரூ.18-க்கு விற்ற நெல்லுக்கு ரூ.36 சேர்த்து ரூ.54 தருகிறேன் என கூறி விட்டு வெறும் ரூ.2 மட்டும் சேர்த்து ரூ.20 கொடுக்கிறார். அதே போல ரூ.2,700-க்கு விற்ற ஒரு டன் கரும்புக்கு ரூ.5,400 சேர்த்து ரூ.8,100 தருகிறேன் என கூறி விட்டு வெறும் ரூ.200 சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 கொடுத்து மோடி அய்யா இந்து விவசாயிகள் காதில் பூ சுற்றி விட்டார். அதற்காக விவசாயிகள் காதில் பூவை சுற்றி கொண்டு போராடி வருகிறோம் என தெரிவித்தார்.