24 லட்சம்‌ மோசடி வழக்கில் அ.தி.மு.க. கிளை செயலாளர், தங்கையுடன்‌ கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியை சேர்ந்த கல்யாணி என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் அரசுப்பள்ளியில் நூலகர் பணிக்கு தேர்வானதால் ஊராட்சி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடப்பள்ளியை சேர்ந்த தங்கராசுவின் சகோதரர் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்று ஏமாற்றியதால் மனமுடைந்த தங்கராசு, கல்யாணியின் வீட்டின் முன்பு தீக்குளித்து பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது உறவினர் மதிவதனி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.12 லட்சம் வீதம் ரூ.24 லட்சத்தை பெற்றுக்கொண்டு, போலியாக பணி நியமன ஆணைகள் கல்யாணி வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெகதீஸ்வரன் மற்றும் மதிவதனி ஆகியோர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் அம்பிகாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், கல்யாணி மற்றும் அவரது அண்ணன் செந்தில்குமார் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும் சிலருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை போலியாக அச்சடித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்யாணி மற்றும் செந்தில்குமாரை காவல்துறை கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக பஞ்சபூத தலமான அக்னி தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். வழக்கமாக கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். அண்ணாமலையார் கோவிலில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது மட்டுமின்றி திருவண்ணாமலை பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி காட்சியளிக்கும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டு கோவிலின் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது.

இந்தாண்டு தீபத்திருவிழா இன்று காலை கோவில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் வருகிற 19-ந் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முறைகேடு விசாரணை கமிஷன் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியை அரசு முடுக்கி விட்டாலும், பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று 3-வது நாளாக கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். முன்னதாக மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது,

கேள்வி:- நீங்கள் நிறைய பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?.

பதில்:- மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- மழைநீர் தேக்கம் சிறிது குறைந்திருக்கிறதா?.

பதில்:- ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாக குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ‘ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.

முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இதுகுறித்து உரிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

கேள்வி:- இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

பதில்:- நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மட்டுமின்றி பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கரூர், நாமக்கல், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி தெற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வழுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழையில் விடாத பகல் கொள்ளை…! தக்காளி விலை ரூ100 தாண்டியது …!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதன்காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தக்காளி விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. காய்கறிகளி விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக திமுகவினர் அப்புறப்படுத்தல்

முதல்வரின் ஆணையேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற உறுப்புனர் தமிழிசை தங்கபாண்டியன் அவர்கள்,தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஹசான் மௌலானா மற்றும் மேற்கு பகுதி செயலாளர் அரிமா சு. சேகர் அவர்களின் ஆலோசனைபடி 178-வது வட்டக்கழக செயலாளர் கே.என்.தாமோதரன் அவர்கள் கழக உடன்பிறப்புகளோடு இணைந்து வட்டகழகத்திற்குட்பட்ட மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரியுடன் நேரில் ஆய்வுசெய்து தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

மழையின் காரணமாக சாலையில் விழுந்த புளியமரத்தை உடனே அகற்றிய வடலூர் காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெத்தனாங்குப்பம் ரோடு பிரிவு அருகில் கனமழை காரணமாக புளியமரம் ஒன்று ரோடு பகுதியில் விழுந்தது அதனை உடனே வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி அவர்கள் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் சக்திவேல்,K. வெங்கடேசன், S. வெங்கடேசன் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடனே அகற்றப்பட்டது வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்படும் முன் துரிதமாக செயல்பட்ட குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்களும் வடலூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் நண்பர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல்துறை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலத்தில் வைத்து கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் 201,211,404 பிரிவுகளின் கீழ் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல்,சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் தனிப்படை காவல்துறை கூடுதல் விசாரணையை மேற்க் கொள்ள நீதிமன்றத்தில் மனு அளித்து கனகராஜின் சகோதரர் தனபாலிடம் 11 நாட்களும், நண்பர் ரமேஷிடம் 10 நாட்களும் காவல்துறை மூலம் கூடுதல் விசாரணையானது நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 6 ம் தேதி இவர்கள் இருவரையும் குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தி மீண்டும் கூடலூர் சிறையில் அடைத்தனர்.

இன்று இவர்களுக்கு நீதிமன்ற காவல் முடியும் நிலையில் தற்போது தனிப்படை காவல்துறை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருவரையும் நேரில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா இவர்கள் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தும், மேலும் இவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில்வரும் 22.11.2021 வரை காவலில் வைக்க மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

பொதுமக்கள் அவசர உதவி எண்கள் தமிழக அரசு அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மட்டுமின்றி பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அவசரத் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம். தேவை இருப்பின், கவனமுடன் இருக்கவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு அரசு அறிவித்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இலவச உதவி எண் – 1070
சென்னை மழை உதவி: 04425619206, 04425619207, 04425619208
Whatsapp: 94454 77205
மேலும் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவித்துள்ளது.

துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.54 லட்சம் மோசடி

சென்னை எண்ணூரிலுள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த வெங்கடேசன், கடந்த 2013ம் ஆண்டு விருப்பு ஓய்வு பெற்று இவருடைய மகன் விஜயராகவன் என்பவருக்கு வேலை தேடி வந்துள்ளார். அப்போது, வெங்கடேசனுக்கு அவரது நண்பர் ஆனந்த் மூலம் அறிமுகமான சுவாதீஸ்வரன் என்பவர், சென்னை துறைமுகத்தில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் அவர்கள் மூலம் உங்கள் மகன் விஜயராகவனுக்கு துறைமுகத்தில் காலியாக உள்ள உதவியாளர் வேலையை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும், சுவாதீஸ்வரன் மனைவி அனிதா சென்னை துறைமுகத்தில் உறுப்பினராக ஆக பணிபுரியும் தனசேகர், நக்கீரன், கார்கோ செக்‌ஷனில் பணிபுரியும் சங்கரலிங்கம் ஆகியோர் இவரது நெருங்கிய குடும்ப நண்பர்கள் என்றும் அவர்கள் மூலமாக கட்டாயம் துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் வெங்கடேசனிடம் கூறியுள்ளார். அதன் பேரில் வெங்கடேசன், 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி 2021ம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.54 லட்சம் பணத்தை சுவாதீஸ்வரனுக்கு கொடுத்துள்ளார்.

வெங்கடேசன் மகனுக்கு வேலை வாங்கி தராமல் சுவாதீஸ்வரன் மற்றும் அவரது அனிதா தலைமறைவாகி விட்டனர். பின்னர், இதுதொடர்பாக வெங்கடேசன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொரட்டூர், தமிழ்நாடு மின்வாரிய அலுவலக காலணியில் வசித்து வரும் சுவாதீஸ்வரன், அவரது மனைவி அனிதா மற்றும் துறைமுகத்தில் வேலை செய்து வரும் சங்கரலிங்கம் என பொய் சொல்லி ஏமாற்றிய சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.