வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்த லட்சுமி, இவரது கணவர் ஞானம். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமியின் மாமனார் செல்வராஜ் காலமாகிவிட்ட நிலையில், கணவர் ஞானத்துக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக லட்சுமி தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கொடுக்காமல் வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து முறையிட்டபோது, லட்சுமியிடம் பேசிய அலுவலக உதவியாளர் ஒருவர் சான்றிதழ் கிடைக்க வேண்டுமென்றால் தாசில்தாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி தனக்கு தெரிந்த சமூக ஆர்வலரை அழைத்துக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் சென்ற நிலையில், நகையை அடகு வைத்து ரூ.15 ஆயிரம் பணத்தை அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அலுவலக உதவியாளர் தனசேகர் சான்றிதழ் கிடைத்து விடும் எனக்கூறியதை லட்சுமியுடன் சென்ற நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.4110 கோடிக்கு கணக்கு காட்டாத தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி…

1921- ம் ஆண்டு தமிழக நாடார் சமுகத்தினரால் நாடார் வங்கி என வியாபார நிதி சேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1962-ம் ஆண்டு பரந்துபட்ட வணிக மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்தைத் தலைமை இடமாகக் கொண்டு 546 கிளைகளோடு 21 மாநிலங்களில் இந்த வங்கி இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இந்த வங்கி மீது சில புகார்கள் இருந்து வந்துள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மீது வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 27 மற்றும் 28-ம் தேதிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். விசாரணையில், இந்த வங்கியில் 4110 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்குகள் இல்லாமல் இருப்பதாக வருமான வரித் துறையினர் சோதனையின் போது அலுவலர்கள் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றில், அதில் வெளிநாடு பணப் பரிமாற்ற நிறுவனங்கள், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் ஒவ்வொரு பணப் பரிமாற்றம் தொடர்பான ஆண்டு தகவல் அறிக்கையை அழிக்க வேண்டும். இது சிறப்புப் பணப் பரிவர்த்தனை என்ற பெயரில் கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையை சில வங்கிகள் கொடுப்பது கிடையாது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வங்கியின் முதலீடுகள், பணப்பரிவர்த்தனைகள், பங்குத்தொகைகள் என அனைத்திலும் முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சில குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளில் 2700 கோடி ரூபாய் அளவுக்கு நிகழ்ந்த ரொக்க பரிவர்த்தனை தொடர்பான கணக்குகள் முழுமையாகக் காண்பிக்கப்படவில்லை. ரூபாய் 110 கோடி கடன் அட்டை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து எந்த தகவலும் இல்லை. 200 கோடி ரூபாய் லாப பங்கு தொகை குறித்து எந்த கணக்கும் காட்டப்படவில்லை.

ரூபாய் 600 கோடி வங்கி பங்கு முதலீடு தொடர்பான கணக்குகள் காட்டப்படாமல் உள்ளது. அதே சமயம் பல நிதி பணப் பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. அதேபோல் வங்கி ஏற்கனவே தாக்கல் செய்த கணக்குகள் பூர்த்தியடையாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூபாய் 500 கோடி அளவுக்கு வட்டி செலுத்தியது தொடர்பான கணக்கையும் காண்பிக்காமல் வங்கி இருந்து வந்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வருமானவரித் துறையினர் அந்த வங்கி நிர்வாகிகளிடம் விசாரணை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி விற்பனை படு ஜோர்!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை..!!

நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் 30 -06-2023 (வெள்ளிகிழமை) நடைபெற்றது. இதில்,கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

அப்பொழுது அரசு  மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் இருப்பதாக அதிக அளவில் புகார்கள் விவசாயிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூ இது குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மட்டும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இது  தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பொழுது சந்து கடைகள் எதுவும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் ராஜூ தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர் . ஈஸ்வரன் மேலும் பேசுகையில், காவல்துறை கூறியது போன்று சந்து கடைகள் எதுவும் மூடப்படவில்லை அதற்கு மாறாக அது அதிகரித்த வண்ணமே உள்ளது மற்றும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளும் விற்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.

இதுமட்டுமின்றி, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தனர் . இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறினர்.

மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ச.உமா அவர்கள் உடனடியாக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல வங்கி அதிகாரிகள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியில் 75 வயதான பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ள கந்தசாமி என்பவர் தனது மனைவி ருக்மணி மற்றும் தனது பேரன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள “ஈக்விடாஸ்” என்னும் தனியார் வங்கியில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார்.

கடன் வாங்கியதில் இருந்து ஒவ்வொரு மாதம் 10-ம் தேதி மாத மாதம் 11 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி வந்துள்ளார். அதன்படி இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தி உள்ளார். இந்நிலையில், இந்த மாதம் 10-ம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணைத்தொகையை குடும்ப சூழல் காரணமாக 20 நாட்கள் ஆனாலும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

ஆகையால் கடந்த இரண்டு நாட்களாக கந்தசாமியின் வீட்டிற்கு எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரவுடிகளைப் போல வந்த தினேஷ் மற்றும் மணி என்ற இருவர் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும் இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள்ளோம் எனவும் வீட்டில் உள்ள டிவி இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு பூட்டு போட வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டுவிட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 75 வயதான கந்தசாமியை நாற்காலியில் அமர வைத்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சாலையில் அமர்த்தி உள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு மாத தவணைத் தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா என கூறி இருவரையும் சிறை பிடித்தனர். மேலும் வயதான நபரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடுப்பு முதல் அண்டா வரை சாலையில் வீசி இருவர் மீதும் பல்லடம் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கடன் பெறுவோர் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையில் கடன் தொகை திருப்பி செலுத்த முடியாமல் போனால், கடன் தொகைக்கான கால அவகாசம் கொடுப்பது, ஜப்தி போன்ற நடவடிக்கைக்கான முன் அறிவிப்பு, வீட்டின் முன்பு அறிவிப்பு ஓட்டுவது போன்ற பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில் அதனை எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கந்துவட்டி கும்பலை போல “ஈக்விடாஸ்” வங்கியின் அதிகாரிகள் கந்துவட்டிக்காரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.100 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரையில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்றது, அப்போது புளியரை சோதனை சாவடியில் அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, லாரியில் அதிக பாரம் ஏற்றி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தது மட்டுமின்றி லாரியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த லாரி ஓட்டுநர், காவல் உதவி ஆய்வாளர் ஜேம்சிடம் 100 ரூபாய் கொடுத்தார்.

இதை வாங்கிய அவர் இந்த தொகை போதாது கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்க, இதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு, அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறையினர் மகாராஜன், காளிராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி கடந்த 2020 முதல் 2021 வரை அதாவது கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக் பணிபுரிந்து வந்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாகக் கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தினர்.

இதில், லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 23.06.23 காலை திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியின் வீட்டில், டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீடு. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம்: காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் கிரிஷ் பால் பண்ணை மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என ஆசைவார்த்தை கூறி வணிகர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதன்விளைவு சொந்த ஹெலிகாப்டரில் வலம் வரும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்து, ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டும் அளவிற்கு மாறினார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸின், சாயம் போகப்போக வெளுக்க ஆரம்பித்தது, கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர் மற்றும் கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கணேஷ் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார் லாடஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, பூதலுார் ஆய்வாளராக இருந்த கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜ்க்கு சென்று கணேஷிடம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரகு பிராசத் மற்றும் சீனிவாசன் என்பவர்களுக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிறகு மறுநாள் அப்போது சிறப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சோமசுந்தரம், கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்கவும் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அத்துடன் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர கோரியுள்ளனர்.

கணேஷிடமிருந்து ஏப்.19-ம் தேதி 5 லட்சமும், 29-ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரமும், கண்ணன் இருவரும் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரணையில் தெரியவர, லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை கட்டிப்போட்ட.. பாஜக பெண் நிர்வாகி கைது…

குழந்தைகள் வண்ணங்கள் முதல் எழுத்துக்கள் வரை முதல்முதலாக மழலையர் பள்ளியில் தான் குழந்தைகள் தான் பார்க்கின்றன. அங்கு அவர்கள் பார்க்கும் உலகம் இனிமையானதாக இருக்க அவர்களின் கல்வி அடிப்படைக்கு அஸ்திவாரம் போடும் இடம் மழலையர் பள்ளி.

ஆனால், குழந்தைகள் எவ்வளவு குறும்பு செய்தாலும், எந்த காரணம் கொண்டும் அடிக்கவே கூடாது. குழந்தைகளை அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடுமையாக இருக்கிறது. மேலும் மழலையர் பள்ளிகள் எளிதாக ஆரம்பிக்க முடியாது, கடுமையான விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் சிட்கோ நகர்ப் பகுதியில் மை பாட்டி வீடு என்ற மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார். மீனாட்சி நடத்தி வரும் மழலையர் பள்ளியில், ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் 7 வயது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் சிறுவன் படித்து வருகிறான். சிறுவன் மழலையர் பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்களாம்.

இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் பெற்றோர் கேட்டனராம். அதற்கு அவர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தார்.

அதன் பேரில் பள்ளிக்கு சென்று காவல்துறை விசாரணை செய்ததில், பள்ளி நிர்வாகி மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக கருதினர். இதையடுத்து, மழலையர் பள்ளியின் உரிமையாளரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.

பள்ளிச் சீருடையில் தலைமை ஆசிரியுடன் விமானத்தில் பறந்த மாணவி

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை – வள்ளுவரின் கூற்றிற்கு இணங்க தேசிய திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துயுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாணவநல்லூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார்.

இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை அளவில்லாத சந்தோஷத்தை அடையச் செய்தார்.

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி

நாடு முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் பலர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை குறி வைத்து அரசின் கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்த கும்பல், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் மற்றும் மகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி, அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல், கோயம்புத்தூரில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது. அந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள், கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடியில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட், லாரன்ஸ்ராஜ், மாணிக்கம், சகாயராஜ், எட்வின் மற்றும் ஜேம்ஸ் ஆகிய 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்து, இந்த கும்பலிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம். கார்டுகள், 1 காசோலை, 7 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இதில் வங்கி கணக்குகள் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை டெல்லி முகவரியில் வாங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் 500 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்து இருக்கலாம் என பது தெரிய வருகிறது.