திறப்பு விழா கண்ட நாளிலேயே கடைக்கு சீல் வைப்பு..!

வேலூர், காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் அருகே ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி, கடையில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனால், பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குள் முண்டியடித்து குவிந்தனர். வரிசை, சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்தார். இதையடுத்து, தனது காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்தார்.

பிரியாணி கடை மேலாளரை அழைத்து, ‘‘பிச்சையா போடுறீங்க… எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க, பாவம்! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க’’ என்று அறிவுறுத்தினார். அப்போதும் கூட்டம் கலையாததால், காவல்துறை மூலம் கூட்டம் கலைக்கப்பட்டு, பிரியாணி கடை இழுத்து மூடப்பட்டது.

அப்போது, ‛‛ஏன் இப்படி வைத்துள்ளீர்கள். பிச்சை போடுறீங்களா?. கடையை மூடுங்க.. வாடிக்கையாளர்களை உட்கார வைக்க முடியாதா? உங்களை நம்பி எத்தனை பேர் வெயிலில் காத்து கிடக்கின்றனர்” என கடிந்து கொண்டார். இதையடுத்து கூட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறை கடையை மூட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் பிரியாணி தான் முக்கியம் என கடைக்குள் வேகவேகமாக நுழைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பொதுமக்களை காவல்துறை அப்புறப்படுத்திவிட்டு கடையை பூட்டினர். மேலும் சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த கடை உரிமமின்றி திறக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்மூலம் திறப்பு விழா கண்ட நாளிலேயே பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலம் வாங்கி தருவதாக கூறி பாஜக நிர்வாகி ரூ.51 லட்சம் மோசடி..!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சிவகாசியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம், திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த பாஜக அரசு தொடர்புத்துறை மாவட்டச் செயலாளரும், நில புரோக்கருமான சத்தியராஜ், அய்யாசாமி உட்பட 3 பேர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் ஆமத்தூர் அருகில் 5 ஏக்கர் நிலத்தை ரூ.4 கோடியே 5 லட்சத்துக்கு நல்ல இடம் இருக்கிறது.

இப்போது வாங்கிப் போட்டால் எதிர்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என ஈஸ்வரனிடம் ஆசை காட்டியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஈஸ்வரன் கடந்த மாதம் 21-ம் தேதி ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். 29-ம் தேதி நிலப்பத்திர பதிவுக்கு ரூ.41 லட்சம் செலவாகும் என்று கூறி அந்த தொகையை சத்தியராஜூம், அய்யாசாமியும் பெற்றதாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று சென்றவர்கள் பத்திரப்பதிவுக்கு அழைக்காததால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன், சத்தியராஜை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் உறவினர்கள் சிலரை அழைத்து கொண்டு ஆலாவூரணியில் உள்ள சத்தியராஜ் வீட்டிற்கு சென்று பத்திரப்பதிவு குறித்து கேட்டுள்ளார். அப்போது சத்தியராஜ், ஈஸ்வரனை யார் என்றே தெரியாது என கூறி உள்ளார்.

இதனையடுத்து ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை சத்தியராஜ், அய்யாசாமி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் திருத்தங்கல் – விருதுநகர் சாலையில் வாகனச் சோதனையின் போது சத்தியராஜை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி அரசு முத்திரையிட்ட காரில் வலம் வந்த மாற்றுதிறனாளி அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி..!

பொன்னேரி பாலாஜி நகர், 7வது வார்டு, பாரதிதாசன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த மாற்றுத் திறனாளி அன்பு பரணி நாகவேல். அரசு முத்திரையிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் பெரிய அரசு அதிகாரி போல் வலம் வந்ததால், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டவர் சுப்பன் என்பவர் தனக்கு அரசுப்பணி வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அன்புவிடம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார்.

பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவி ஆணையர் பதவிக்கான ஆணை மற்றும் போலியாக தயார் செய்த அடையாள அட்டையையும் ஆண்டவர் சுப்பனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அன்பு, கொடுத்துள்ளார். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை அடையாள அட்டை மாற்றுவது வழக்கமாக இருந்த நிலையில் ஆண்டவர் சுப்பனுக்கு நாள் 1.5.2023 என்று குறிப்பிட்ட அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு, முடிவடையும் நாளான 1.5.2024ம் குறிப்பிடாமல் இருந்ததால் ஆண்டவர் சுப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இது போலி என்ற சொல்லி ஆண்டவர் சுப்பன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்காக அன்பு, ஆண்டவர் சுப்பனுக்கு ரூ.2 லட்சம் திருப்பி கொடுத்துள்ளார்.

மீதியை பிறகு தருகிறேன் எனக்கூறியுள்ளர். ஆனால் கடந்த 2 மாதமாக பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டவர் சுப்பன் உட்பட 6 பேர் நேற்று அன்பு வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பிக் கேட்டனர். அப்போது, அன்பு பரணி நாகவேலுடன் இருந்த பெண் ஒருவர் ஆண்டவர் சுப்பனை தாக்கி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. மேலும் அன்பிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தகவலறிந்த பொன்னேரி காவல் ஆய்வாளர் சின்னதுரை நேரில் வந்தார்.

விசாரணையில் ஆண்டவர் சுப்பனுடன் வந்த மீஞ்சூர் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.1 லட்சம், பாரதி என்ற பெண்ணிடம் ரூ.50,000, ரத்னா என்ற பெண்ணிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், மோகன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் என பலரிடம் இருந்தும் சுமார் ரூ.6 லட்சம் வரை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, 3 மாதத்திற்கு ஒரு முறை இடத்தை மாற்றி வசித்து வந்துள்ளார். இது குறித்து பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அன்புவை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை: டிஐஜி விஜயகுமார் கடைசியாக யாருடன் பேசினார்…?

கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் இன்று காலை 6.45 மணியளவில் வழக்கம் போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் கேம்ப் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு அவரது அறைக்கு சென்ற விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

2009 ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விஜயகுமார் மரணத்திற்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. காவல்துறையில் பணியில் நிறைய மன அழுத்தங்கள் உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிகாரிகளுக்கு உச்ச பட்ச மன அழுத்தம் உள்ளது. காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும்.

வேலைப்பளு அதிகம் இருக்கும். குடும்பம் ஓரிடத்திலும் அதிகாரிகள் ஓரிடத்திலும் பணியாற்றுவார்கள். அதுவே மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். காவல்துறையில் நிறைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நேர்மையான அதிகாரி சிறப்பாக பணியாற்றியவர். அவர் காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் யாரிடம் பேசினார்? என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும். விஜயகுமார் மரணம் தற்கொலையாக இருந்தாலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

டிஐஜி விஜயகுமார் சொந்த ஊர் தேனியில் இறுதிச்சடங்கு…!

கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று தமிழகத்தையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமாரின் தந்தை வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராகவும், தாய் ஆசிரியையாகவும் இருந்து ஓய்வு பெற்றவர்கள். கடந்த 2003ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த இவர் அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெற்றி 2009-ம் ஆண்டு விஜயகுமார் ஐ.பி.எஸ். ஆனார்.

தேனி மண்ணிற்கேற்ற வீரமும், தீரமும் விஜயகுமாரிடம் நிறையவே இருந்ததால் சவாலான கேஸ்களையும் சாதுர்யமாக கையாண்டு உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் பெற்று வந்தார். காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக இருந்த அவர் சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் டிஐஜி ஆக புரோமோஷன் வழங்கப்பட்டு கோயம்புத்தூரில் பணியமர்த்தப்பட்டார். மகன் காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்தும் அரசு குடியிருப்புகளில் அவர் இருந்தும் சொந்த ஊரான தேனியிலேயே வசித்து வருகிறார்கள் டிஐஜி விஜயகுமாரின் பெற்றோர்.

தேனி ரத்தினம் நகரில் உள்ள விஜயகுமார் இல்லத்தில் உறவினர்கள் குவிந்து வருகின்றனர். மகனின் மறைவுச் செய்தி அறிந்து விஜயகுமாரின் அம்மா துடிதுடித்து அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. கோயம்புத்தூரில் உடற்கூராய்வு முடிந்த பின்னர் இறுதிச்சடங்கிற்காக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி கொண்டு செல்லப்படவுள்ளது. இதனிடையே தேனி மாவட்ட காவல்துறையினர் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.

கடலூரில் தக்காளி கிலோ 20.., கிலோ 20.. !?

இந்தியாவில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இந் நிலையில் தமிழகத்தில் 130 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் மாறுபட்ட விலையில் தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி சாம்பார் வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என அறிவித்து தக்காளி விற்பனையை தொடங்கினார். இதனை பார்த்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கடையில் போட்டி போட்டுக் கொண்டு கிலோ 20 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர்.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டு தக்காளி வாங்கி சென்றனர். கடலூர் பகுதியில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்திது மட்டுமின்றி பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: தீவிர விசாரணை நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்

கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில், கோயம்புத்தூர் சரக டிஐஜி திரு. விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப @CMOTamilnadu எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க @BJP4Tamilnadu சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நேற்று அண்ணாமலை தலைமையில் திருமணம்: இன்று குழந்தைக்கு பிறந்தநாள்…!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில், தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 39 ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்தார். இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், தலா ஒரு ஜோடிக்கு… 4 கிராம் தங்கத்தில் தாலி, மணமக்களுக்கு பட்டுடைகள், மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இது குறித்து விசாரித்தபோது, நேற்றைய தினம் அங்கு திருமணம் செய்துக்கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்ற தகவல்; அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்குத்தான் இன்றைய தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலை தலைமையில் நடந்த திருமணம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

+ 1 படிக்கும் மாணவியை குழந்தை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தும் தந்தை..!?

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் + 1 படித்து வரும் 16 வயது மாணவி தனது தாயுடன் ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு தனது தாயுடன் வந்ததார். பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் எஸ்பி தங்கதுரையிடம், மாணவியின் தாய், ‘‘எனது கணவர் குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்கிறார். மேலும் +1 படிக்கும் மகளின் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்.

அப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனது மகளை தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில், மாணவியை தொடர்ந்து படிக்க வைக்கவும், தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றத்திற்கு யார் காரணம்..?

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் சரி ஆகாததால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தங்கள் குழந்தையை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வலது கை அழுகத் தொடங்கியது. தவறான டிரிப்ஸ் போட்டதே இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகியது.

இதையடுத்து, அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் குழந்தையின் அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.