வாடிக்கையாளரை ஏளனமாக பேசிய வங்கி ….. ரூ. 34,500 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

கோயம்புத்தூர் லாண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா. இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் அவரது சேமிப்பு கணக்கில் ரூ. 831-ம், ஃபிக்சட் டெபாசிட் கணக்கில் ரூ. 1,44,000-ம் இருந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.50 முதல் 60 வரை அபராதம் விதித்து, சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி பிடித்தம் செய்து உள்ளது.

இவ்வாறு அபராதம் விதித்தது தவறு என வாடிக்கையாளர் வங்கியில் கேட்டபோது கடந்த 2018 ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வங்கி மீண்டும் அவரது கணக்கில் வரவு வைத்து உள்ளது. ஆனால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிடித்தம் செய்த அபராத தொகையை வங்கி திரும்ப வழங்கவில்லை. இதனால் யசோதா தனது கணவர் மூலமாக கடந்த 2018-ம் ஆண்டு, கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக 2022 ஜூலை மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், வங்கியின் தவறை சுட்டிக்காட்டி வாடிக்கையாளர் யசோதாவின் கணவர் சண்முகசுந்தரம், வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கணவருக்கு வேறு வேலை இல்லாததால் தீய வழியில் பணம் சம்பாதிக்க, வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்று வங்கி நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொண்ட ரூ. 34.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.34,500-யை 4 வாரங்களுக்குள், வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.

தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என போஸ்டர்கள்

மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்குலத்தோர் தேசியக் கழகம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தேவரினத்திற்கு துரோகம்.. வராதே வராதே தூங்கா நகருக்கு வராதே” என எடப்பாடி பழனிசாமியின் மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் மற்றொரு அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் எட்டு தோல்வி எடப்பாடி பழனிசாமி என விமர்சிக்கப்பட்டுள்ளன.அதிமுக மாநாடுக்கு இன்னும் முழுமையாக 3 நாட்கள் கூட இல்லாத நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் வழங்கிய பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்..!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், மாநிலங்களில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறகு உரை நிகழ்த்துவார்.

இந்த ஆண்டு முதலமைச்சரின் காவல் பதக்கம் காவல் துறை உயர் அதிகாரிகள் 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 காவல் துறையினருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, வட சென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க், கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், தேனி எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே துணை எஸ்.பி குணசேகரன், நாமக்கல் உதவி ஆய்வாளர் முருகன், நாமக்கல் காவலர் ஆர்.குமார் உள்பட 6 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டது.

6 காவல் துறையினருக்கும் முதலமைச்சர் காவல் பதக்கங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதக்கங்கள் மற்றும் வெகுமதி வழங்கினார்.  இதையடுத்து பதக்கம் பெற்ற இருவரும் நேற்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணனிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய காவல் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து மற்றும் பாராட்டு பெற்றனர்.

கல்வி கொடை வள்ளல் ராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றும் மதுரை சென்றார். நேற்று இரவு முனிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர் மதுரை விமான நிலைய சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.

இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை சிலைமான் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, அங்குள்ள முரசொலி மாறன் படிப்பகத்தை பார்வையிட்டு அண்ணா மன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர் மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ. 1.10 கோடி செலவில் அமைத்து தந்தமைக்காகவும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ. 71.45 இலட்சம் செலவில் அமைத்து தந்தமைக்காகவும், மேலும் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைத்து சிறப்பித்து, தனது வாழ்த்துகளை தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை வழங்கி பாராட்டினார்.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி மாறன் 90-வது பிறந்தநாள்….மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

மறைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான முரசொலி மாறனின் 90-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கருணாநிதியின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறனின் 90-ஆவது பிறந்தநாள் இன்று. மதுரை சிலைமானில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று.முரசொலி மாறன் புகழ் போற்றுவோம். அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வரைப்படத்தில் இருந்து தூக்கப்பட்ட கிராமம்… மீனவ மக்களை விரட்ட திட்டமா..?

அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் சில அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட தீவில் வாழும் மக்களை அழித்துவிட்டு அந்த தீவையே சூரையாடி விட்டு அந்த தீவையே அழித்துவிடுவார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு அப்படி நடந்த சம்பவம் கண்டுபிடிக்கப்படும். இது சினிமாவில் பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இந்த உலகில் பல இடங்கள் காணாமல் போயுள்ளன.

அந்த இடங்களில் ஒன்று தான் குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் தூத்தூர் மீனவ கிராமம், வரைப்படங்களில் இருந்து மாயமாகியுள்ளது, இன்று சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல இந்த தூத்தூர் மீனவ கிராமமும் காணாமல் போயுள்ளது. தூத்தூர் போல இந்த கிராமத்திற்கு பின்னால் கதை இருக்குமா? இல்லை வேறு காரணங்கள் இருக்குமா? அக்கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக…சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற 3-ம் வகுப்பு மாணவன்..

சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள் அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன் அழைக்கப்பட்டு இருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பாப்பனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் லிதர்சன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னையில் நடக்கும் சுதந்திர தின கொடியேற்று விழாவை பார்க்க ஆசைப்படுவதாக தங்கள் ஆசிரியர் ஜோஷ்வாவிடம் கூறியுள்ளனர்.

அதற்கு அவர், சுதந்திர தினம் குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். 6 பேர் கட்டுரை எழுதியதில், முதலிடம் பெற்ற லிதர்சனுக்கு தமிழக அரசின் பொதுத்துறை அனுமதி அளித்து, அரசின் சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தது. அதன்படி, தனது தாய் ஆனந்தவல்லியுடன் சென்னை வந்த லிதர்சன், கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். லிதர்சன் கூறும்போது, ‘‘சென்னைக்கு முதல்முறையாக வந்து சுதந்திர தின விழாவை பார்த்தது சந்தோஷமாக உள்ளது’’ என தெரிவித்தான்.

மருத்துவர்களின் அலட்சியப் போக்கு, மெத்தனமே என் மக்களின் கால் பாதிப்பிறகு காரணம் …! “எங்களை கருணை கொலை செய்யுங்கள்”–!

ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் கோதண்டபாணி ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தனது 10 வயது மகள் பிரதிக்‌ஷாவுடன் டிஜிபி அலுவலகம் வந்தார். காவல் சீருடையுடன் கையில் தேசியக் கொடியை பிடித்தபடி வந்த அவர் திடீரென மகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, எனது மகளுக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டு எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகளைச் சேர்த்து மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை 5 ஆண்டுகளாக மகளுக்கு தொடர்ந்து கொடுத்தேன். இந்த மாத்திரைகளின் எதிர்விளைவு காரணமாக எனது மகளுக்கு வலதுகால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தேன். மீண்டும் மருத்துவர்கள் நோயை சரியாகக் கண்டறியாமல் சிகிச்சை அளித்தனர். இதனால், மகளின் வலது கால் பாதம் சூம்பிப்போனது. மேலும் உடலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டன. மருத்துவர்களின் அலட்சியப் போக்கு, மெத்தனமே இதற்கு காரணம்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனது 10 வயது மகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் தவறான சிகிச்சை காரணமாக மகளின் கால் பாதிக்கப்பட்டதாக ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகம் முன்பு ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கோதண்டபாணி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

அப்போது தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் தனக்கு மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் தனக்கு வேண்டுமே தவிர மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை எனக் கூறி காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு இன்று மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கவுண்டச்சிபுதூர்…! கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் வராததால் மீண்டும் பரபரப்பு…!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றம் சார்பில் கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நேற்று காலை 11 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் வரதா காரணத்தால் ஊராட்சி செயலர் பெரியசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த முன் வந்தனர். ஆனால் ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் இல்லாமல் கூட்டத்தை நடத்துவதா என பொதுமக்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதாக தெரிகிறது. பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பதாக கூறி கடந்த மே 1-ந்தேதி நடைபெற்ற கூட்டத்திலும் ஊராட்சி தலைவர் பங்கேற்க வில்லை, அதேபோன்று நேற்றும் புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் ஊராட்சி பகுதியில் கடந்த 4 வருடங்களாக சாக்கடை, குடிநீர், தெரு விளக்கு, துப்புரவுப்பணி, தார் சாலை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதாகவும், பிரச்சினைகளை மனு மூலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றால் முறையான பதில் எதுவும் தராமல் சத்தம் போட்டு திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

எனவே தலைவர் செல்வி கிராம சபை கூட்டத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஒத்தி வைப்பு அதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.