பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது: டிவிட்டர் மூலம் அற்புதம்மாள் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருப் பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்த பேரறி வாளன் கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் பரோலில் 4-வது முறையாக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பேரறிவாள னுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும், அதனால் இனிமேல் சிறைக்கு அவர் செல்லக்கூடாது. அதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டிவிட்டர் மூலம் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

இந்திய யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கிய லட்சத்தீவும் ஒன்று. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக ப்ரபுல் ஹடா படேல் செயல்பட்டுவருகிறார். ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பர்புல் ஹடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த விவகாரம் லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பங்கேற்றார்.

கேரளாவில் வசித்து வரும் ஆஷா சுல்தானா விவாதத்தின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது. பர்புல் ஹடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆஷா சுல்தானா மீது லட்சத்தீவு காவல்துறை புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரசில் தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் இணைந்தார்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த முகுல் ராய்க்கும், மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டும் அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

மேற்கு வங்க பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார். இதையடுத்து, முகுல் ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று தனது மகன் சுப்ரன்ஷு ராயுடன் இணைந்துள்ளார்.

டி.கே. சிவக்குமார்: பா.ஜ.க. பிக்-பாக்கெட்டில் ஈடுபடுகிறது

நாட்டில் மும்பை, ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர்கள் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, 2021ம் ஆண்டில் பெட்ரோல் விலையை பா.ஜ.க. 48 முறை உயர்த்தியுள்ளது. நடுத்தர வருவாய் ஈட்டும் மக்கள் எத்தனை முறை சம்பள உயர்வு பெற்றுள்ளனர்? குறைந்தபட்ச ஊதியம் எத்தனை முறை உயர்த்தப்பட்டு உள்ளது? தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எத்தனை முறை ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது? விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை எத்தனை முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது?

இது பா.ஜ.க.வின் பகல் கொள்ளை என கூறியுள்ளார். பெட்ரோல் வரி என்ற பெயரில் ஒவ்வொருவரிடமும் பா.ஜ.க. பிக்-பாக்கெட்டில் ஈடுபடுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் வழியே வரியாக பா.ஜ.க. ரூ.20.60 லட்சம் கோடி சேகரித்து உள்ளது என்றும் கூறியுள்ளார். இப்படியே போனால், வரும் 2024ம் ஆண்டுக்குள் பெட்ரோல் ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்தார்.

பி.எப் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை வந்து சேராது

நாடு முழுவதும் கோவிட் -19 பரவல் காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது பி.எப் கணக்கில் இருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பி.எப் கணக்கில் இருக்கும் தொகையின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்ப பெறலாம்.

இந்நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியர்களின் பி.எப் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை இந்த மாதம் முதல் பி.எப். கணக்கில் வந்து சேராது. ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில் அவர்களது பங்கை பி.எப் கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும்.

மேலும் வருங்கால வைப்புநிதி கணக்கில் இருந்து கோவிட் -19 முன் தொகையையும் எடுக்க இயலாது. எனவே இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று ஆதார் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி – இந்த அரசு அதன் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும்

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் ஆளும் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கட்சியின் நிறுவனர் சரத்பவார் இந்த அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற சந்தேகம் அடிக்கடி எழுப்பப்படுகிறது.

ஆனால் சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி. இந்த அரசு அதன் முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும். மேலும் அடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படும்.வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

சிவசேனாவுடன் கூட்டணியா..!? கூண்டில் அடைபட்ட புலியுடன் எங்களுக்கு நட்பு தேவையில்லை

மகாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் சிவசேனா, பா.ஜனதா இடையே மீண்டும் பழைய உறவு துளிர்விடுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டி ஒன்றில் புலியுடன் நட்பு கொள்ள விரும்புவதாக கூறினார். இது சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ந்தது.

இந்நிலையில் சந்திரகாந்த் பாட்டீலின் பிறந்த நாளான நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது , எனக்கு சமீபத்தில் ஒருவரிடம் இருந்து புலி புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்று பரிசாக கிடைத்தது. இதை பரிசளித்தவரிடம் இது நல்ல பரிசு என்றும் ‘நாங்கள் எப்போதும் புலிகளுடன் நண்பர்கள்’ என்றும் கூறினேன். இருப்பினும் புலி அவர்களின் அடையாளம் என்பதால் ஊடகங்கள் சிவசேனாவுடன் இணைத்து பார்த்துவிட்டனர்.

நாங்கள் எப்போதும் அனைவருடன் நட்பு பாராட்ட விரும்புகிறோம் என்பது உண்மை தான். ஆனால் நாங்கள் காட்டில் உள்ள ஒரு புலியுடனான நட்பையே விரும்புகிறோம். கூண்டில் அடைபட்டுள்ள புலியுடன் இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் முழு நாட்டிற்கும் சொந்தமானவர். அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கானவர் இல்லை. எனவே அவர் மாநில தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள கூடாது

காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை: வீரப்ப மொய்லி பரபரப்பு பேட்டி


காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை பிரதமர் மோடி ஆடும் போட்டி அரசியலை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி: உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும்

மகாராஷ்டிர மாநிலம் மெல்காட் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தடுப்பூசி மீது சந்தேகம் அடைந்து அதை போட்டுக்கொள்ள தயங்கியுள்ளனர். இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் பழங்குடியின மக்கள் பேசும் மொழியான கோர்கு மொழியிலேயே தடுப்பூசி குறித்து எடுத்துரைத்துள்ளனர். இதையடுத்து, பழங்குடியின மக்கள் தங்கள் அச்சம் தவிர்த்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வந்தாக அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த செய்தியை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ மெல்காட் வனப்பகுதியில் நடந்த நிகழ்வு உள்ளூர் மொழியின் சக்தியையும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது” என்றார்.