குண்டூரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முதல் ஆலை

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தாடேபள்ளி முகாம் அலுவலகத்தில் தூய்மையான ஆந்திரா திட்டம் குறித்த விரிவான ஆய்வு நடத்தினார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார மேலாண்மை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். நோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவும்.

மேலும் கிராமங்களில் திடக்கழிவு பதப்படுத்தும் மையங்கள் மற்றும் நகரங்களில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை ஆலைகளின் செயல்முறை 2022 க்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி குண்டூரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கழிவு முதல் ஆற்றல் ஆலை அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்

கோவிட் மாற்றத்திற்குப் பிறகு கேரளாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய புதிய யோசனை

வெளிநாட்டு ஊழியர் மாநாட்டில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு உரையாற்றினார். கோவிட் மாற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சூழ்நிலையில், மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, கேரளாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடிய புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளைத நோர்கா-ரூட்ஸ் துறை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசு ததோபா-அந்தரி தேசிய பூங்காவை நீட்டிக்க முடிவு

மகாராஷ்டிராவில் நேற்று மாநில வனவிலங்கு வாரியத்தின் 17 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் பாலசாகேப் தாக்கரே வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் இலக்கை அதிகரிக்க, ததோபா-அந்தரி தேசிய பூங்காவின் மையப் பகுதியை 78.89 சதுர கிமீ நீட்டிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஆதித்யா தாக்கரே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் போராட்டத்தை இந்து-சீக்கியர் இடையேயான போராட்டமாக மாற்ற முயற்சி..!?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், லக்கிம்பூர் படுகொலைகளை விவகாரத்தில் நியாயம் கேட்டு தொடர்ந்து வருண் காந்தி குரல் எழுப்பி வருகிறார். இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘போராடும் விவசாயிகளை ‘காலிஸ்தானி’ என்று அழைப்பது, நமது எல்லைகளில் போராடி ரத்தம் சிந்திய இந்த பெருமைமிக்க மகன்களின் தலைமுறையினருக்கு அவமதிப்பு மட்டுமல்ல, இது தேசிய ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானதும் ஆகும். இது தவறான எதிர்வினைகளையும் ஏற்படுத்தும்’ என எச்சரித்துள்ளார்.

மேலும் அவர், ‘லகிம்பூர் கேரி விவகாரத்தை இந்து-சீக்கியர் இடையேயான போராட்டமாக மாற்ற முயற்சி நடக்கிறது. இது ஒழுக்கக்கேடானது மட்டுமின்றி தவறானதும் ஆகும். ஒரு தலைமுறை மறக்க நினைக்கும் காயங்களை மீண்டும் கிளறுவதும் ஆகும்’ என்றும் குறிப்பிட்டு உள்ளார். ஏழை விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுவதற்கு எந்த மத அர்த்தங்களும் கிடையாது எனவும் வருண் காந்தி அதில் காட்டமாக கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி திட்டவட்டம்: அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், லக்கிம்பூர் படுகொலைகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கலந்து கொண்டு பேபேசுகையில், லக்கிம்பூர் படுகொலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதியை கோருவதாகவும், ஆனால் படுகொலைகளுக்கு காரணமான மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகனை பாதுகாக்க அரசு முயல்வதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கடந்த 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருவதையும் அதில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததையும், பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டினார். மேலும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்? என்று பிரியங்கா காந்திகேள்வி எழுப்பியது மட்டுமின்றி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனவும் திட்டவட்டமாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

நவாப் மாலிக் கேள்வி: மும்பை சொகுசு கப்பலில் போதை பார்ட்டி வழக்கில் பாஜக நிர்வாகியின் மைத்துனர் விடுவிப்பு ஏன்?

நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலி கேப்ரில்லாவின் சகோதரரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், கோவா காவல்துறையினரும் இணைந்து போதைப்பொருளுடன் கைது செய்த நிலையில் மீண்டும் மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்படும் கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போதைப்பொருள தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் அதிகாரிகள் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர். கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது.

இதில் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உட்பட நடிகர்கள், நடிகர்களின் மகன்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி போதைப்பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சொகுசு கப்பலில் போதை பார்ட்டி நடத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆரியகான் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் பிடியில் சிக்கிய பாஜக தலைவர் மோஹித் கம்போஜின் மைத்துனர் ரிஷப் சச்தேவை, அதிகாரிகள் விடுவித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், ‘மும்பை பாஜக கட்சியின் இளைஞரணி முன்னாள் தலைவராக இருப்பவர் மோஹித் கம்போஜ். இவரது மைத்துனர் ரிஷப் சச்தேவ், கைதான ஆரிய கான் மற்றும் பிறருடன் வரும் புகைப்படத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை வெளியிட்டனர். ஆனால், ரிஷப் சச்தேவ்வை காவல்துறை கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

மாயாவதி கேள்வி: காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதிப்பது ஏன்?

ராஜஸ்தானின் அனுமன்கார்க் பகுதியில் காதல் விவகாரத்தில் தலித் வாலிபர் ஒருவர் கடந்த 7-ந்தேதி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர்களை பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.

இது குறித்து மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராஜஸ்தானின் அனுமன்கார்கில் தலித் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார். இது மிகவும் சோகமானதும், கண்டனத்துக்குரியதும் ஆகும். ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மவுனம் சாதிப்பது ஏன்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை சத்தீஸ்கார் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் சந்தித்து ரூ.50 லட்சம் இழப்பீடு கொடுப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள மாயாவதி, இதற்கு பதில் தேவை எனவும், இல்லையென்றால் தலித்துகளின் பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துமாறும் கூறியுள்ளார்.

ஆஷிஸ் மிஸ்ரா காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் உத்திர பிரதேச காவல்துறை இதுவரை மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி காவல்துறை முதல் சம்மன் அனுப்பினர். ஆனால், உடல்நிலை காரணமாகக் கூறி காவல்துறை விசாரணைக்கு ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி நேற்று முன்தினம் 2-வது சம்மனை காவல்துறை ஆஷிஸ் மிஸ்ராவின் வீட்டில் ஒட்டினர். ஆனால் மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா நேற்று முன்தினம் இரவு சொந்த கிராமத்துக்குச் சென்றதால் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஷிஸ் மிஸ்ரா சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் காவல்துறை டிஐஜி உபேந்திர அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினார்.

ஏறக்குறைய 11 மணிநேரம் லக்கிம்பூர் கெரி கலவரம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். ஆனால், காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ஆஷிஸ் மிஸ்ராவை காவல்துறை நேற்று இரவு 11 மணி அளவில் கைது செய்து நீதிபதியின் வீட்டில் ஆஜர் படுத்த நீதிபதி ஆஷிஸ் மிஸ்ராவை திங்கள் கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறையில் இருந்து கொண்டே காதலன் கோடு போட… ரோடு போட்ட காதலி..

நடிகர் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் நடித்த நடிகை லீனா மரியா பால் இவர் மலையாள நடிகர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா, இந்தியில் மெட்ராஸ் கஃபே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வரும் லீனா மரியா பால் கொச்சியில் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

ஏற்கெனவே சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ 18 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட இவரை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். லீனா மரியா பால் இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டெல்லி ரோகிணி சிறையில் இருந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

17 வயதில் இருந்து பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த சுகேஷ் சந்திரசேகர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் இருந்தபடியே செல்போன் பெற்ற சுகேஷ் சந்திரசேகர், தனது கூட்டாளிகள் உதவியுடன், பெரும் தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, சில காரியங்களை செய்து தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த மோசடிக்கு லீனா மரியா பாலும் உடந்தை என்பதால் நடிகை லீனா மரியா பாலுவையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மக்களை உறைய வைக்கும் சம்பவம்: ஒடும் ரயிலில்… பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா தலைநகரம் மும்பை நோக்கி நேற்று இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. மகாராஷ்டிராவின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் படுக்கை பெட்டியில் ஏறினர். பின்னர் கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர்.

மேலும், பெண் ஒருவரையும் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது பாலியல் வன்கொடுமையை தடுக்க முயன்ற பயணிகள் 6 பேரை கொள்ளையர்கள் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். மும்பையின் கசாரா பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் கூச்சலிடத் தொடங்கினர்.

உடனடியாக அங்கு விரைந்த ரயில்வே காவல்துறை கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர். ஆனால், 6 பேர் தப்பிச்சென்றனர். இந்நிலையில் லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.