Formula 4: பொதுநல வழக்கு..! மழை..! எஃப்ஐஏ அனுமதி சுணக்கம்..! சென்னையில் கார் பந்தயம் நடந்தது இல்ல..!

தெற்காசியாவிலேயே முதல் முறையாக 6 அணிகள் பங்கேற்கின்றன. 3.5 கிமீ தூரம் கொண்ட கார் பந்தயம் சென்னையில் இன்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும். உலகளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15-வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 29 -ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஃபார்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அமா்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிமன்ற உத்தரப்படி, 7 நிபந்தனைகளுடன், அதாவது “போக்குவரத்து மாற்றம் செய்யப்படும், “மருத்துவமனை செல்வோருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது” என தமிழ்நாடு அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து “FIA சர்வதேச அமைப்பு அனுமதி வழங்கும் பட்சத்தில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தலாம்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆகஸ்ட் 30 -ஆம் தேதி இரவு பெய்த மழை காரணமாக தொழில்நுட்ப ரீதியாக திட்டமிட்டபடி பயிற்சி பந்தயங்களை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதுஒருபுறம் இருக்க சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு, சென்னை பந்தயத்துக்கான அனுமதி சான்றிதழை வழங்குவதில் சுணக்கம் காட்டியது. இதற்கு நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக கூறப்பட்டது. எஃப்ஐஏ வழங்கும் அனுமதி சான்றிதழை, போட்டி அமைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே பந்தயத்தை நடத்த முடியும்.

இதனால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிமன்றம் தரப்பில் இரு முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மாலையில் 5.30 மணி அளவில் போட்டியை நடத்துவதற்கான சான்றிதழை எஃப்ஐஏ வழங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஃபார்முலா 4 கார்பந்தயத்தின் பயிற்சியை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.