ரிசர்வ் வங்கி ஆளுநர்: இந்தியாவின் UPI மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு..!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஐந்து நாள் பயணமாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, “QR குறியீடுகள் மற்றும் விரைவான கட்டண முறைகளின் இணைப்புகள் மூலம் UPI ஏற்கனவே பல நாடுகளில் உள்ளது. மேலும் பல நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மேலும் வளரும். எதிர்காலத்தில் சர்வதேசமயமாக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ சேவையை மேம்படுத்துவம் வகையில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.