தூய்மைப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிய வேண்டும்..!

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் சார்பில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சியில் இலவச கழிப்பறைகளைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரரிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது மா.வெங்கடேசன் பேசும்போது, ‘‘தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியின்போது கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கை களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முறையாகக் கணக்கிட்டு சரியாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்’’ என தெரிவித்தார்.