திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நேற்று முன் தினம் இரவு திருமுருகன்பூண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே காரில் சென்ற வாலிபர்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் போதையில் இருந்துள்ளனர்.
இதற்கு, அபராதம் விதித்தால் நீதிமன்றத்திற்கு சென்று கட்ட நேரிடும் என கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். வாலிபர்கள் ரூ.5 ஆயிரம் தர முன்வந்தனர். பணம் இல்லாததால் காவலர் குணசுதனை காரில் அழைத்து சென்று அவிநாசியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் ரூ.7 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளனர். மேலும், காரில் இருந்த பீர் பாட்டில்களையும் குணசுதன் பெற்றுள்ளார். விலை உயர்ந்த புளூடூத் ஹெட்செட்டையும் எடுத்து வைத்துள்ளார்.
இதை அறிந்து மாநகர காவல் கண்காணிப்பாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.