Rahul Gandhi: “ஊழலின் நாயகன் பிரதமர் மோடி ..!”

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி I.N.D.I.A.கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல்.

ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும், அரசியலமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்ற. மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் 2-3 பெரிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம், இரண்டாவது பணவீக்கம் ஆகும். ஆனால் பாஜக மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்தார். இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் விளக்க முயன்றார். வெளிப்படைத்தன்மைக்காகவும் தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டாவதாக, வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள்.

மேலும் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?. தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் இதைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்பது நாட்டிற்கும் தெரியும்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவதுதான் எங்கள் முதல் பணி. வேலைவாய்ப்பு அளிப்பதற்கு நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம்.

ஒரு யோசனை புரட்சிகர யோசனை – உத்திரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்களுக்கும் பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம். மேலும், இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குகிறோம். போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம்” எனராகுல் காந்தி தெரிவித்தார்.