தேர்தல் நடத்தை விதிமீறல் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி மீது வழக்குப்பதிவு

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்குவதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி நேற்று இரவு பீளமேடு ஆவாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி இரவு 10.40 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், இரவு 10 மணிக்கு பின்னரும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில், பீளமேடு காவல் நிலையத்தில் 341, 293, 143 ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக வேட்பாளர் அண்ணாமலை குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் மீது இன்று வழக்குப் பதியப்பட்டது.