சந்திரபாபு நாயுடு வாக்குறுதி: 50+ வயது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.4,000’..!

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் ஒரே கட்டமாக மே 13-ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடி உயிர் துறந்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே.

அவரின் 197-வது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்ததும், பிற்படுத்தப்பட்டோரின் நலன்களைக் காக்க பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படும்.

ரூ.1.50 லட்சம் கோடியில் பி.சி. சப்-பிளான் திட்டம் அமல்படுத்தப்படும். சொந்த தொழில் புரிய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவையில் பி.சி.க்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பி.சி.க்கு நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.