ஜி.ராமகிருஷ்ணன்: பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனர்..!

சேலம் மாவட்டம், சாமிநாதபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஜி.ராமகிருஷ்ணன் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, , நாட்டில் அதிகரித்துவிட்ட விலைவாசி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு, ஜிஎஸ்டி விதிப்பு ஆகியவற்றின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட்டது. கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவே மோடி அரசு இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, மக்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசாக, பாஜக இருக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் போக்கையே, பாஜக கடைப்பிடித்து வருகிறது. தேர்தல் நாடகத்தின் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு விலையை குறைத்துவிட்டு, மகளிர் தினத்தை முன்னிட்டே, விலை குறைக்கப்பட்டதாக பொய்யான பிரச்சாரத்தில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக தெரிவித்து, இன்று இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் இருக்க காரணமும் பாஜக அரசு தான். பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான், அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வேலை தேடி வருகின்றனர் என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.