மம்தா பானர்ஜி: “விஷப் பாம்பைக் கூட நம்பலாம்…! பாஜகவை நம்ப முடியாது…!”

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் கூச் பெஹரில் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார். அப்போது, “பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் பதிவு செய்யவேண்டும்? அவர்கள் அதிகமான பதிவுகளை விரும்புகிறார்கள். அப்போதுதான் அதனை நிறுத்த முடியும். நீங்கள் ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூச் பெஹரின் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தேபாஷிஸ் தார் பாஜகவின் பிர்ஹும் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக விமர்சித்தார். “தேபாஷிஸ் தார் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்” என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.