அமைச்சர் அதிஷி மர்லினா பரபரப்பான குற்றச்சாட்டு: பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டுகிறார்கள்..!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவில் சேருமாறு தன்னை மிரட்டியதாக டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதிஷி மர்லினா, பாஜகவில் சேருங்கள்; இல்லாவிடில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என தன்னை அச்சுறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவில் இணைய வேண்டும். பாஜகவில் சேராவிடில் அடுத்த மாதமே அமலாக்கத்துறை தன்னை கைது செய்யும் என பாஜக மிரட்டியதாக அதிஷி மர்லினாபுகார் தெரிவித்திருக்கிறார்.

தனது நெருங்கிய நண்பரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றும் அதிஷி மர்லினா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அதிஷி மர்லினா, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் நான், சவுரவ் பரத்வாஜ், துர்கேஷ் பாடக், ராகவ் சட்டாவை கைது செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது.

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் என்னை கொண்டு வந்துள்ளனர். கெஜ்ரிவால், சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி ஒற்றுமையாக வலுவாக இருப்பதாக பாஜக உணர்கிறது. தற்போது ஆம் ஆத்மியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர் என அதிஷி மர்லினா தெரிவித்தார்.