வாக்காளர்களுக்கு வழங்க ரூ.15 லட்சம் சேலைகள் பதுக்கல் அதிமுக வேட்பாளர்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சிவிஜில் செயலியில் ஒரு புகார் வந்தது. அதில், ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையம் கவுந்தப்பாடி சாலை அண்ணா நகர் வீதியில் ஒரு கட்டிடத்தில் உரிய ஆவணங்களின்றி பண்டல் பண்டலாக சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு இருந்த 161 பண்டல்களை கைப்பற்றி பிரித்து சோதனை செய்தனர். அதில் ஒரு பண்டலுக்கு 150 சேலைகள் வீதம் 161 பண்டல்களில் மொத்தம் 24 ஆயிரத்து 150 சேலைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கட்டிட உரிமையாளரான காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரனை பிடித்து விசாரித்தபோது, கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கு இந்த சேலைகளை வாங்கி கொடுத்தார். அதனை லாரியில் ஏற்றி வந்து இங்கு இறக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க சேலைகளை பதுக்கி வைத்திருந்ததாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கட்டிட உரிமையாளரான ரவிச்சந்திரன், ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் ஆகிய 3 பேர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, குடோனில் பதுக்கி இருந்த 161 பண்டல்களில் இருந்த 24,150 சேலைகளையும் காவல்துறை பறிமுதல் செய்தனர்.