நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.
இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.
இதன் விளைவாக செப்டம்பர் 22 -ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 -ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 -ஆம் தேதி கைது செய்தது. 28 -ஆம் தேதி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார் .
மேலும் அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 16 -ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர். ஆகையால் டெல்லி காவல்துறை பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளனர்.