அமலாக்கத்துறை என கூறி ரூ.1.69 கோடி பணம் பறித்த 5 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சாலை குமரன் நகர் 3-வது வீதியை சேர்ந்த நூல் கமிஷன் வியாபாரி அங்கு ராஜ்மற்றும் திருப்பூர் பி.என். சாலையை சேர்ந்த துரை என்ற அம்மாசை இருவரும் நண்பர்கள். கடந்த மாத இறுதியில் இவர்களுக்கு வாட்ஸ் – அப் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த விஜய் கார்த்திக் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். மேலும், தங்களது நிறுவனத்தினர் வியாபார ரீதியான பணப் பரிவர்த்தனை செய்ததில் வெளி நாடுகளில் இருந்து வங்கிக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பெறப்பட்டு இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தங்கள் நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற ஊர்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கட்டுமானப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு ரொக்கத் தொகை தேவைப்படுகிறது. எனவே, எங்களுக்கு ரொக்கத் தொகை கொடுத்தால், அதே அளவுக்கு இரட்டிப்பாக உங்களது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என அந்நபர் தெரிவித்தார். இதை நம்பிய அங்கு ராஜ், அம்மாசை ஆகியோர் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.1 கோடியே 69 லட்சம் பெற்றனர்.

பின்னர், அதை வீடியோ எடுத்து தங்களிடம் பேசிய விஜய் கார்த்திக்குக்கு அனுப்பினர். அதன் பின்னர், சிறிது நேரத்தில் அங்கு ராஜ் கடைக்கு வந்த 5 பேர், தங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் என்றும், இங்கு கணக்கில் வராத கருப்புப் பணம் இருப்பதாகவும் கூறி கடையை சோதனை யிட்டனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1.69 கோடியை உரிய ஆவணங்கள் இல்லாததால் எடுத்துச் செல்வதாகவும், அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வந்து விசாரணைக்கு பின்னர் பெற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் கூறிச் சென்றனர்.

அந்நபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல்துறையில் அங்கு ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் 4 தனிப் படைகள் அமைத்து காவல்துறை விசாரித்தனர். அதில், நாமக்கல் மாவட்டம் கல்லாங்காட்டு வலசு வெப்படை சாலையை சேர்ந்த விஜய் கார்த்திக், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த நரேந்திரநாத், கோயம்புத்தூர் சுண்டாக்காமுத்தூரைச் சேர்ந்த ராஜ சேகர், டாடாபாத்தை சேர்ந்த லோகநாதன், மேட்டூரை சேர்ந்த கோபி நாத் ஆகியோருக்கு இந்த மோசடியில் தொடர் பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.88.66 லட்சம், 2 கார்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.