‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட வற்புறுத்திய பெண் அமைச்சர்..!

கேரளாவின் கோழிக்கோட்டில் வலதுசாரி அமைப்புகளால் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி உரையாற்றி முடித்ததும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என முழங்கினார். தன்னுடன் சேர்ந்து பார்வையாளர்கள் அனைவரும் கோஷமிட வலியுறுத்தினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பலரும் கோஷமிடவில்லை. இதனால் சற்று ஆத்திரமடைந்த அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘பாரத நாடு எனக்கு மட்டும்தான் தாயா? உங்களுக்கு இல்லையா? இதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ம்ம்ம்… சொல்லுங்கள்.

சரி, இனி உங்கள் உற்சாக குரலை எழுப்புங்கள்’’ என்று மீண்டும் முழக்கமிட்டார். இம்முறையும் பார்வையாளர்கள் கம்மென்று இருந்ததால், கடுப்பான அமைச்சர் மீனாட்சி லேகி, ‘‘அதோ மஞ்ச டிரஸ் போட்டிருக்கிற அந்த லேடி. எந்திருங்கம்மா. உங்களத்தான் சொல்றேன். பாரதம் உங்கள் தாய் இல்லையா? ஏன் இப்படி பண்றீங்க? இப்ப முழக்கமிடுங்க’’ என மீண்டும் அமைச்சர் கோஷமிட, அந்த பெண்மணி வாயே திறக்கவில்லை. இதனால் நொந்து போன அமைச்சர் மீனாட்சி லேகி, ’’தேசத்தை பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள், தேசத்தை மகிமை செய்ய வெட்கப்படுபவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. நீங்க வெளியே போகலாம்’’ என தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.