தலைமை செயலகம் என குறிப்பிடப்பட்டுள்ள எம்பளத்துடன் காரில் உலா வந்த 2 போலிகள் கைது

சேலம் கொண்டலாம்பட்டி ரோந்து காவல்துறை அரியானூர், மகுடஞ்சாவடி ஆகிய பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த தலைமை செயலகம் என்று குறிப்பிடப்பட்டு அரசு எம்பளமும் இருந்த காரை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த திருமால், பெருங்களத்தூரை சேர்ந்த கருப்பையா என்பதும், இவர்கள் தலைமை செயலக நிதித்துறையில் நிர்வாக அலுவலர்கள் என போலியான அடையாள அட்டையை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும், இவர்கள் தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் என்றும், தங்களுக்கு எல்லா அதிகாரிகளையும் தெரியும் என்றும் கூறியுள்ளனர். பணியாளர்களுக்கு டிரான்ஸ்பர், வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அரசு எம்பளத்துடன் கூடிய காரை பறிமுதல் செய்த காவல்துறை 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சேலம் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என தெரிய வருகிறது.