அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் மூடியை வைத்த மருத்துவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ஈச்சங்குடி மெயின் சாலையை சேர்ந்த பிரகாஷ் மனைவி மகாலட்சுமி. இவர் நேற்று தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கறிஞருடன் வந்து ஒரு மனு அளித்தார். அதில், தாய் வசந்தா காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் எனது தந்தை சிவானந்தம் இறந்து விட்டார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி எனது தாயாருக்கு கர்ப்பப்பை அகற்ற தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு 20-ம் தேதி வீடு திரும்பினார்.

அதன் பின்னர் எனது தாயாருக்கு அடிக்கடி வயிற்றுவலி மற்றும் ரத்தப்போக்கு பிரச்னை இருந்தது. இதற்காக வலி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தும் சரியாகவில்லை. வலி அதிகமானதை தொடர்ந்து கடந்த 16-ம் தேதி மீண்டும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் வயிற்றில் ஏதோ வட்டமாக இருப்பதாக கூறினார். இந்நிலையில் எங்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் எனது தயாருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது வயிற்றில் 3 செ.மீ. அளவுள்ள வட்டமான அலுமினிய மூடி இருந்ததை அகற்றினர். அந்த மூடி மருத்துவ உபகரணங்களுடன் உள்ளதாகும்.

எனது தாயாருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை அறுவை கிசிச்சையின் போது தவறுதலாக வயிற்றில் மூடியை வைத்து சிகிச்சை அளித்து விட்டு தற்போது எதுவும் தெரியாதது போல் எங்களிடம் உங்கள் தாயாரை அழைத்துச் செல்லுங்கள் என கூறுகின்றனர். தற்போதும் எனது தயார் அந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.நான் எனது தாயார் வயிற்றில் என்ன இருந்தது என கேட்டதற்கு, மருத்துவர் வட்டமான அலுமினிய மூடியை கொடுத்தார். இதை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனவே எனது தயாருக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.